
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தை சேர்ந்தவர் 60 வயதான கம்பம் மாலிக். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருந்த நிலையில் மனைவி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். மகள்கள் இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மாலிக் மட்டும் தனியாக கஜபதியில் வசித்து வந்துள்ளார்.
தனியாக வசித்து வந்த மாலிக் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்ததை குறித்து அதே பகுதியில் உள்ள தனது உறவுக்கார பெண்ணிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவுக்கார பெண் தன்னையும் மாலிக் இவ்வாறு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.
பின்னர் இருவரும் சேர்ந்து இதை பற்றி அந்த ஊரை சேர்ந்த மற்ற பெண்களிடம் பேசும் போது, மாலிக் இதே போல் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தது தெரியவந்துள்ளது. எனவே ஆத்திரமடைந்த மாலிக்கினால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் சேர்ந்து “இன்னும் அவனை விட்டு வைத்தால் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து விடுவான் அது நமது மகள்களையே கூட வருங்காலத்தில் பாதிக்கும்” என பேசி மாலிக்கை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.
திட்டத்தின் படி கடந்த (ஜூன் 05) தேதி இரவு மாலிக் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது வீட்டிற்குள் புகுந்த எட்டு பெண்கள் மாலிக்கை சரமாரியாக வெட்டி உடல் பாகங்களை தனித்தனியாக பிரித்துள்ளனர். பின்னர் கை கால்கள் தலை அனைத்தையும் எடுத்து கொண்டு காட்டு பகுதிக்குச் சென்ற பெண்கள் அதை ஒன்றாக வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். பின்னர் தங்களது வீட்டிற்கு சென்று வழக்கமான வேலைகளை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தனது தந்தையை பார்க்க வெளியூரில் இருந்து வந்த மகள்கள் தந்தை காணவில்லை என போலீசில் புகாரளித்துள்ளனர். அதே சமயம் காட்டு பகுதிக்கு விறகுகளை சேமிக்க சென்ற இளைஞர்கள் அப்பகுதியில் மனித எலும்புகள் இருப்பதாக போலீசில் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் எலும்புகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேத பரிசோதனையின் முடிவில் உயிரிழந்தது 60 வயதுடைய ஆண் என தெரியவந்துள்ளது. பின்னர் மாலிக்கின் மகள்களிடம் மாலிக்கின் மரபணுவை சேகரித்த போலீசார் அதை சோதனைக்கு உட்படுத்தி இறந்தது மாலிக் என்பதை உறுதி செய்தனர். கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 6 பெண்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மாலிக் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதையும் இதுபோல வேற எந்த பெண்களுக்கும் நடக்கக்கூடாது என எண்ணி மாலிக்கை கொலை செய்ததாகவும், அப்பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில் கொலை செய்த 8 பெண்களையும் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.