10 ரூபாய் கொடுத்து 9 வயது சிறுமியை அழைத்துச் சென்று.. சீரழித்து கொன்ற கொடூரன்! 5 வருடங்களுக்கு பிறகு கிடைத்த நீதி

சிறுமி மற்றும் குற்றவாளியின் டிஎன்ஏவுடன் பொருந்தும் கலப்பு டிஎன்ஏ இருப்பது உறுதி செய்யப்பட்டது
Maharashtra pocso case
Published on
Updated on
2 min read

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில், 2021ஆம் ஆண்டு 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, வெட்டி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது தஹானு நீதிமன்றம். தஹானு தாலுகாவுக்கு உட்பட்ட ரான்ஷெட் வங்காட்பாடா கிராமத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 4 ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமியை, அவரது தாய் அதே கிராமத்தில் உள்ள பெட்டி கடைக்கு மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக அருகில் உள்ள அனுப்பியுள்ளார்.

அப்போது வழியில் சிறுமியை சந்தித்த 51 வயது குற்றம் சாட்டப்பட்ட பிரமோத் ரத்ன கோஷே வழி மறித்துள்ளார். 10 ரூபாய் நாணயத்தை கொடுத்து ஆசை காட்டி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சிறுமி தனது  தாயிடம் நடந்த சம்பவத்தை தெரிவிப்பதாகக் கூறி கூச்சலிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற கோஷே, வீட்டில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிறுமியை சரமாரியாக தாக்கியதாக வழக்கு விசாரணையில் தெரியவந்தது. அந்த சிறுமியை துரத்திச் சென்று, ஒரு தண்ணீர் தொட்டிக்கு அருகில் அவளது தலை, கழுத்து, முகம் மற்றும் கைகளில் பலமுறை கடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளார். 

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற விகாஸ் பர்க்யா போலடா என்பவர் சிறுமியை காப்பாற்ற முயன்றுள்ளார். அவரையும் அரிவாளால் தாக்கிய குற்றவாளி, பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 24 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். காயமடைந்த நேரடி சாட்சியின் வாக்குமூலம் வழக்கில் முக்கிய ஆதாரமாக அமைந்தது. மேலும், தடயவியல் ஆய்வக பரிசோதனையில் சிறுமியிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில், சிறுமி மற்றும் குற்றவாளியின் டிஎன்ஏவுடன் பொருந்தும் கலப்பு டிஎன்ஏ இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடலில் 20 இடங்களில் வெட்டுப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் சிறுமி.

மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் அரிவாள், மூடப்பட்டிருந்த கடைக்குப் பின்னால் உள்ள புதர்களில் இருந்து மீட்கப்பட்டது. இதுவும் வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி ஏ.ஆர். ரஹானே, குற்றவாளி பிரமோத் ரத்ன கோஷேவுக்கு மரண தண்டனை விதித்ததுடன், ரூ.75,000 அபராதமும் விதித்தார். குழந்தைக்கு இழைக்கப்பட்ட கொடூரம் மற்றும் குற்றத்தின் தன்மை நீதித்துறையின் மனசாட்சியையும், ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கியதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.

சிறுமியை ஆசை காட்டி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் மிகுந்த ஈவிரக்கமற்றது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதனிடையே, சம்பவத்துடன் தொடர்புடைய ஆபாச காணொளிகள் பார்க்கப்பட்ட காலக்கட்டத்தை தடயவியல் ஆய்வகத்தால் உறுதியாக நிரூபிக்க முடியாததால், போக்சோ சட்டத்தின் பிரிவு 12-ன் கீழான குற்றச்சாட்டில் இருந்து குற்றவாளியை நீதிமன்றம் விடுவித்தது. எனினும், கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com