

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் சித்தூர் சாலை பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரு கும்பல் சில பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வருவதாக திருவள்ளூர் பகுதியை சேர்ந்தவர்கள் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படை உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் இன்று அதிகாலை திருத்தணி பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அதிலும் குறிப்பாக பாலாஜி நகர், சப்தகிரி நகர், சாய்முருகன் நகர், காந்தி நகர் ஆகிய பகுதியில் அந்த கும்பல் உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதி முழுக்க போலீசார் தீவிர பரிசோதனை செய்ததில் ஒரு வீட்டில் 4 பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த ஆண் புரோக்கர்களான பெரிய ராமாபுரம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய கணேசன், அவரது தம்பியான 30 வயதுடைய கார்த்திக் பொன்பாடி பகுதியை சேர்ந்த 33 வயதுடைய அருண்குமார், திருத்தணி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய வசந்த குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்திருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இதே போல பல முறை அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து இதனை தொழிலாளாக செய்து வந்தது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரே நேரங்களில் இரண்டு மூன்று வீடுகளை வாடகைக்கு எடுத்து மாறி மாறி ஒவ்வொரு வீட்டில் என விபச்சாரம் செய்து போலீசாரிடம் இருந்து தப்பித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரில் இரண்டு நபர்கள் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட திருத்தணி கார்த்திகேயபுரம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய பரிமளா, திருப்பதி ஆந்திராவை சேர்ந்த 24 வயதுடைய லாவண்யா, சப்தகிரி நகர் திருப்பதியை சேர்ந்த 42 வயதுடைய லட்சுமி, திருப்பதியை சேர்ந்த 33 வயதுடைய லேகா ஆகியோரை அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருத்தணி பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களையும் ஆண்களையும் போலீசார் கைது செய்த சம்பவம் ஆன்மீக நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.