

பேரணாம்பட்டு அருகே தலையில் காயம் அடைந்து வந்த இளைஞரின் தலையில் உடைந்த ஊசியை வைத்து தையல் போட்ட கம்பவுண்டர். பல மணி நேர போராட்டத்திற்கு பின் வேறொரு மருத்துவமனையில் உடைந்த ஊசி அகற்றப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சையின் மூலம் தலையில் உடைந்திருந்த தையல் ஊசி அகற்றம் அரசு மருத்துவர் மற்றும் கம்பவுண்டரின் அலட்சியத்தால் கூலி தொழிலாளி பாதிப்பு.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கொத்தபல்லி கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ் இவர் கூலி வேலை செய்து வருகிறார் இந்நிலையில் இவர் வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும் போது எதிர்பாராத விதமாக தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தனுசை பரிசோதனை செய்த மருத்துவர் நிஷா தலையில் காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் 2 தையல் போடும்படி கம்பவுண்டரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கம்பவுண்டர் லட்சுமணன் தலையில் காயம் அடைந்து வந்த தனுஷின் தலையில் தையல் போடும் போது எதிர்பாராத விதமாக தையல் ஊசி உடைந்து தலையில் சிக்கிக் கொண்ட நிலையில் வேறொரு ஊசியின் மூலம் முழுவதுமாக தையல் போட்டு அனுப்பியுள்ளார். இந்நிலையில் வாலிபர் தனுஷுக்கு தொடர்ந்து தலை வலி அதிகரித்து வந்த நிலையில் ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு தலையை ஸ்கேன் செய்து பார்த்த பொழுது தலையில் தையல் போடும் போது ஊசி உடைந்து இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் அந்த தையல் ஊசியை அப்புறப்படுத்தி உள்ளனர். இது குறித்து தனுஷ் அவரது குடும்பத்துடன் சென்று பேரணாம்பட்டு அரசு மருத்துவர் நிஷாவிடம் கேட்டதற்கு அவர் “இது போன்று நடப்பது சகஜம் தான் இதை பெரிதாக்க வேண்டாம்” என அலசியமாக பதிலளித்துள்ளார். “நாங்கள் அரசு ஊழியர்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது” என்றும் கண்டபடி பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட வாலிபர் தனுஷ் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பேரணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
வசதி வாய்ப்பு இல்லாத ஏழை எளியவர்களுக்காக தான் அரசு மருத்துவமனை இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் அரசு மருத்துவர் மற்றும் கம்பவுண்டரின் அலட்சியத்தால் தலையில் காயம் அடைந்து வந்த இளைஞரின் தலைக்குள் ஊசியை வைத்து தையல் போடப்பட்ட சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.