

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள கொட்டாரக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த இயேசு என்பவரின் மகன் 30 வயதுடைய கண்ணன். இவர் கூலித் தொழில் செய்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கண்ணன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நெல்லை தச்சநல்லூர் பகுதிக்கு வேளைக்கு சென்றிருக்கிறார்.
உடன் பணி செய்யும் மற்ற தொழிலாளிகளுடன் வீடு எடுத்து தங்கி பனி செய்து வந்த நிலையில் கண்ணனுக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியுடன் நெருங்கி பழகி வந்த கண்ணன் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். மேலும் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இதனால் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் கண்ணனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த கண்ணன் சிறுமியுடன் பேசுவதை நிறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் சிறுமி போன் செய்தாலும் அதை எடுக்காமல் தவிர்த்து வந்திருக்கிறார். பின்னர் சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த அவரது பெற்றோர் இது குறித்து விசாரித்த போது கண்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எனவே சிறுமியின் பெற்றோர் இது குறித்து நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் “ஏற்கனவே திருமணமானதை மறைத்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக” கண்ணன் மீது புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்ணனைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.