“பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி” - இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்ட குற்றவாளிகள்.. தந்தை கண் முன்னே மகனுக்கு நடந்த கொடூரம்!

திருவான்மியூர் மற்றும் ராயபுரத்தில் உள்ள உறவினர்களின் வீடுகளில் மாறி மாறித் தங்கியிருந்ததாகத் தெரிகிறது...
Adyar Maithreyan Murder Case
Adyar Maithreyan Murder Case
Published on: 
Updated on: 
2 min read

சென்னை அடையார் இந்திரா நகரில், தந்தையுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 21 வயது இளைஞரை, இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் வழிமறித்து, தந்தையின் கண் முன்னே சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை வழக்கில் ஜீவா, அசாருதீன் ஆகிய இருவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகன் 21 வயதுடைய மைத்ரேயன். இவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தின் சி பிரிவு சரித்திரப் பதிவேட்டில் இடம்பெற்ற குற்றவாளி எனக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட மைத்ரேயன், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து, கடந்த (அக் 21) ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த மைத்ரேயன், (அக் 22) ஆம் தேதி முதல் தினமும் காலை 10.30 மணிக்கு மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட்டு வந்துள்ளார். இதற்கிடையே, மயிலாப்பூர் பகுதியில் சக ரவுடிகளுடன் கஞ்சா விற்பனை தொடர்பாக மைத்ரேயனுக்குப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மயிலாப்பூர் பகுதிக்குச் சென்றால் தன்னை யாராவது கொலை செய்துவிடுவார்கள் என அஞ்சிய அவர், சிறையிலிருந்து வெளியே வந்தது முதல் திருவான்மியூர் மற்றும் ராயபுரத்தில் உள்ள உறவினர்களின் வீடுகளில் மாறி மாறித் தங்கியிருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், இன்று(அக் 27) காலை மைத்ரேயன் தனது தந்தை வேணுகோபாலுடன் ஆட்டோவில் சென்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு, திருவான்மியூரில் உள்ள உறவினர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, காலை 11.30 மணி முதல் மதியம் 12 மணிக்குள் அடையார் இந்திரா நகரில் உள்ள வாட்டர் டேங்க் அருகே ஆட்டோ வந்தபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்தக் கும்பல் மைத்ரேயனை ஆட்டோவிலிருந்து இறக்கி, அவரது தந்தை வேணுகோபால் கண் முன்னேயே சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிகிறது.

Adyar Maithreyan Murder Case
Adyar Maithreyan Murder Case

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அடையார் போலீசார், மைத்ரேயனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 2025ஆம் ஆண்டு மயிலாப்பூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த ஜீவா என்பவரை வெட்டிய வழக்கில் மைத்ரேயன் முக்கியக் குற்றவாளியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே ஜீவா தலைமையிலான கும்பல் இந்தக் கொலையில் ஈடுபட்டதா அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, மைத்ரேயன் கொலை வழக்கில் ஜீவா மற்றும் அசாருதீன் ஆகிய இருவரும் இன்று மாலை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களைக் கைது செய்த போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, மைத்ரேயன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது உறவினர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டப்பகலில் தந்தையின் கண் முன்னே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com