AI பயன்படுத்தி ஆபாச வீடியோ.. தாய் மற்றும் மகளுக்கு வந்த மர்ம மிரட்டல்! சீக்கிரம் பணக்காரனாக இதுதான் வழியா?

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில்
AI-Generated Obscene Video
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இளம் பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாச வீடியோவாக மாற்றி, அவரது குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இருவரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.

இந்த சம்பவம் சிக்மகளூர் மாவட்டத்தின் தரிகெரே தாலுகாவிற்கு உட்பட்ட பாவிகெரே கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் தகவலின்படி, அக்ஷய் மற்றும் சாகுல் என்ற இருவர், செயற்கை நுண்ணறிவு மூலம் எடிட்டிங் செயலியை பயன்படுத்தி பெண்ணின் புகைப்படத்தை ஆபாச வீடியோவாக எடிட்  செய்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை அப்பெண்ணின் தாயாருக்கு அனுப்பி, குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அந்த வீடியோவை சமூக வலைத்தளம் மற்றும் இணையத்தில் வெளியிட்டு பரப்பிவிடுவோம் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையை அணுகினர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் லக்கவல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மிரட்டல் செய்திகளளை  கண்டறிய தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அக்ஷய் மற்றும் சாஹுல் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். ஆரம்பக்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பெங்களூருவில் வேலை செய்து வந்ததாகவும், விரைவாக பணம் சம்பாதிக்கும் நோக்கில் இந்த திட்டத்தை மேற்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சாஹுல் மீது ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், அவர் முன்பு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, இதேபோன்ற முறையில் மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிரும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற மிரட்டல்கள் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com