சென்னை அம்பத்தூரில், குழந்தை இல்லாதது மற்றும் நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாததால் மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் கணவர் தூக்கிட்ட நிலையிலும், மனைவி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாகவும் மீட்கப்பட்டனர். இரண்டு நாட்களுக்கும் மேலாக உடல்கள் வீட்டிலேயே இருந்ததால் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சென்னை அம்பத்தூர், பாடி படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 41 வயதுடைய அருண்குமார். இவரது மனைவி 38 வயதுடைய மாலதி. இருவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணமாகி ஏழு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததுடன், இருவருக்கும் நிரந்தர வேலைவாய்ப்பும் இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (அக் 24) காலை அவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளனர். அப்போது அருண்குமார் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கொரட்டூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கொரட்டூர் போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது அருண்குமார் தூக்கிட்ட நிலையிலும், மாலதி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாகவும் கிடந்துள்ளனர். இருவரது உடல்களும் இரண்டு நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்ததால் அழுகிய நிலையில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது மாலதி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
அதில், கடந்த ஏழு ஆண்டுகளாகக் குழந்தை இல்லாததால் இருவரும் மன உளைச்சலில் இருந்ததாகவும், நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாததால் வீட்டின் அத்தியாவசியத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் சிரமப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது. மேலும், தனது உயிரிழப்புக்கு வேறு யாரும் காரணமில்லை என்றும் அந்தக் கடிதத்தில் மாலதி குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தன்னைக் கொலை செய்துவிட்டு, கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள இருப்பதாகவும் அவர் எழுதியிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில், மாலதியின் மரணம் கொலையா அல்லது வேறு காரணங்களால் நிகழ்ந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை இல்லாமை மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாகத் தம்பதியினர் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், வீட்டில் இருவரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்