
சென்னை மாவட்டம், அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் 19 வயதான நித்தின் சாய். இவர் மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா தனியார் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நித்தின் நேற்று இரவு தனது நண்பர்களுடன் வெளியே சென்ற நிலையில், நித்தின் நண்பரான அபிஷேக் என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்ட நித்தின் சாய் பின்னல் அமர்ந்து சென்றுள்ளார். திருமங்கலம் பள்ளி சாலையில் இருந்து பார்க் சாலை நோக்கி சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் மீது அதே திசையில் பின்னால் வேகமாக வந்த கார் மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அபிஷேக் மற்றும் நித்தின் தூக்கி வீசப்பட்டு நித்தின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போலீசார் நித்தின் சாய் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய அபிஷேக்கை அருகில் இருந்த மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இதை விபத்தாக வழக்கு பதிவு செய்து திருமங்கலம் போலீசார் கார் ஓட்டுநரை தேடி வந்த நிலையில் இது விபத்து இல்லை, கொலை என இறந்து போன நித்தின் சாய் குடும்பத்தினர் பகீரங்க குற்றச்சாட்டை வைத்தனர். மேலும் இதுகுறித்து புகாரளித்தும் திருமங்கலம் போலீசார் முறையாக விசாரிக்கவில்லை எனவும், நித்தினை கொலை செய்தது திமுக கவுன்சிலர் கேகே நகர் தனசேகரன் என்பவரின் பேரன் சந்துரு தான், சந்துருவின் தாயும் திமுகவில் பொறுப்பில் உள்ளதால் பணத்தையும் பதவியையும் வைத்து கொலையை விபத்தாக மாற்ற முயற்சிக்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசிடம் இருந்து இந்த வழக்கு, திருமங்கலம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன. இதில் கேகேநகர் பகுதியைச் சேர்ந்த பிரணவ் என்ற கல்லூரி மாணவன், அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார், அதே சமயம் பள்ளி மாணவியிடம் வெங்கடேஷ் என்ற கல்லூரி மாணவனும் பேசிவந்துள்ளார். இதனை மாணவி பிரணவிடம் தெரிவித்த நிலையில் கடந்த (ஜூலை 27) அன்று பிரணவ் வெங்கடேஷிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளார், இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை பிரணவ் தனது நண்பரான சந்துருவிடம் தெரிவித்துள்ளார், அதே சமயம் வெங்கடேஷும் இதை பற்றி தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் மறுநாள் (ஜூலை 28) அன்று இரவு, பிரணவ் சந்துரு மற்றும் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடேஷை மிரட்ட அண்ணா நகர் சென்றுள்ளார். அங்கு வெங்கடேஷ், நித்தின் சாய், அபிஷேக், ராஜ் மற்றும் பிற நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். ஆக மொத்தம் இரண்டு குழுவினரும் சண்டை போடும் நோக்கத்தில் தான் அவ்விடத்தில் கூடியுள்ளனர். அப்போது காரில் இருந்த பிரணவ் நண்பரான ஆரோன் என்பவர் வெங்கடேஷை அழைத்து மிரட்டியுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த சந்துரு வெங்கடேஷ் தரப்பினரை பார்த்து “நான் யாருன்னு தெரியுமா என் கிட்ட மோதாதீங்க சாவடிச்சுடுவேன்” என கூறியுள்ளார். இதற்கிடையே நித்தின் மற்றும் அபிஷேக் இருவரும் இருசக்கர வாகனத்தில் வேறு ஒரு இடத்திற்கு புறப்பட்டுள்ளனர். இங்கு வெங்கடேஷை மிரட்டி விட்டு சென்ற சந்துரு சாலையில் அபிஷேக்கையும், நித்தினையும் பார்த்ததும் காரை வேகமாக இயக்கி அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து பிரணவ், சந்துரு, சுதன், ஆரோன் ஆகிய நான்கு பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரணவ் மற்றும் சுதனை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆரோன் மற்றும் சந்துருவை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.