“வேறு ஒருவரின் மனைவிக்கு இன்ஸ்டாவில் மெசேஜ்” - கணவர் கண்டித்தும் அடங்காத டெம்போ ஓட்டுநர்.. அடுத்து நடந்த சரமாரி தாக்குதல்!

நேரில் சந்தித்து தனது மனைவிக்கு இன்ஸ்டாவில் மெசேஜ் செய்யவேண்டாம் என எச்சரித்துள்ளார்...
Anthiyur Assault Case
Anthiyur Assault Case
Published on: 
Updated on: 
2 min read

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் தனது மனைவிக்குத் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் டெம்போ ஓட்டுநரைத் தாக்கிய வழக்கில், அவரது கணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். படுகாயமடைந்த டெம்போ ஓட்டுநர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த சுந்தராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவரது மகன் 34 வயதுடைய கோகுல்ராஜ். இவர் டெம்போ ஓட்டுநராக பணிபுரிந்து வாழ்கை நடத்தி வந்திருக்கிறார்.

இந்நிலையில் அதே பகுதியிலுள்ள உத்தர விநாயகர் கோயில் வீதி, கள்ளுக்கடை சந்தில் வசிக்கும் 30 வயதுடைய தேவராஜ் என்பவரது மனைவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்ததாகக் கூறப்படுகிறது. தினமும் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்த நிலையில் இது குறித்து இளம்பெண் அவரது கணவர் தேவராஜிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு கோபமடைந்த அவர் உடனடியாக கோகுல்ராஜை நேரில் சந்தித்து தனது மனைவிக்கு இன்ஸ்டாவில் மெசேஜ் செய்யவேண்டாம் என எச்சரித்துள்ளார்.

இருப்பினும், கோகுல்ராஜ் தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பித் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், தனது நண்பர்களான 19 வயதுடைய நந்தகுமார், 23 வயதுடைய பிரசாந்த், மற்றும் தரனேஷ் (23) ஆகியோருடன் சேர்ந்து கோகுல்ராஜைத் தாக்கியதாகத் தெரிகிறது. நேற்று முன்தினம்(அக் 11) நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலில் கோகுல்ராஜ் படுகாயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு முதலுதவி பெற்ற அவர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கோகுல்ராஜின் தந்தை சிவராஜ், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தேவராஜ் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட நால்வரையும் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இன்ஸ்டாகிராமில் மனைவிக்குக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் டெம்போ ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் அந்தியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com