

அஸ்ஸாம் மாநிலம் ஹைலாகண்டி மாவட்டத்தில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
ஹைலாகண்டி மாவட்டம் கட்லிச்சேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலோய்ச்சோரா பகுதியில், கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. குடும்பத்தினர் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், சிறுமி மட்டும் தனியாக வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர், சிறுமி சிதைந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பிறபுறுகள் மற்றும் உடல் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக சந்தேகத்தின் பேரில் 5 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் அபு மலகர் (18), ஜாய்தீப் ரீ (19), 17 வயது சிறுவன் மற்றும் மோனுஜ் தாஸ் என்ற ராஜ்தீப் தாஸ் (23), பிராஜ் தாஸ் (18) ஆகியோர் அடங்குவர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு 17½ வயது மட்டுமே இருப்பதாகவும், ஆனால் சம்பவத்தின் கொடூரத்தை கருத்தில் கொண்டு அவரை வயது வந்தவராக கருதி விசாரிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஹைலாகண்டி காவல் கண்காணிப்பாளர் அமிதவா சின்ஹா தெரிவித்துள்ளார்.
போலீஸ் விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் சிறுமிக்கு அறிமுகமானவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. சிறுமியின் வீட்டை பற்றிய தகவல்களும் அவர்களுக்கு தெரிந்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் மரணம் தொடர்பாக கிராம மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அஸ்ஸாம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் மேலும் இரு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதன்மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. மேலும் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்க, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (குற்றம்) தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது.
ஹைலாகண்டி காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், ஆரம்பகட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமி கைது செய்யப்பட்டவர்களில் இருவருடன் காதலிப்பதாக பழகி வந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தில், அதில் ஒருவருடன் தொலைபேசியில் பேசிய பின்னர் சிறுமி வெளியே வந்துள்ளார். ஆனால் அங்கு இருவரும் தங்களது நண்பர்களை அழைத்து வந்து, சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.
மேலும், சிறுமி தனது வீட்டிலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், விசாரணை இன்னும் ஆரம்பகட்டத்தில் இருப்பதால் அனைத்து கோணங்களிலும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தல் மற்றும் கொலை தொடர்பான பிரிவுகளின் கீழும், போக்சோ (POCSO) சட்டத்தின் தீவிர பாலியல் தாக்குதல் தொடர்பான பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், சிறுமி தொடர்பாக சில தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பலரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.