மதுரை மாநகர் தெற்கு வாசல் பகுதியில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக புதிதாக தொடங்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு படையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து சிங்கப்பெண் சிறப்பு படையைச் சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் தனபாக்கியலட்சுமி மற்றும் பெண் தலைமை காவலர்கள் தேன்மொழி, தமிழரசி ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட மாணவியை தனியாக அழைத்து சென்று, ரகசியமாக சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து சிங்கப்பெண் சிறப்பு படையினரின் உதவியுடன் அனைத்து மகளிர் காவல்துறையினர் சம்பவம் நடந்த பகுதி மற்றும் அருகிலுள்ள ஆட்டோ நிறுத்தங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் மதுரை மாவட்டம் பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் 65 வயதுடைய முகமது இப்ராஹிம் என்பவரை காவல்துறையினர் அடையாளம் கண்டு பிடித்தனர்.
மேலும், காவல்துறை விசாரணையின் போது உண்மையை மறைத்து குற்றவாளிக்கு உதவியாக செயல்பட்டதாக கூறப்படும் மதுரை ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் 55 வயதுடைய அப்பாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரை மாநகரில் சிங்கப்பெண் சிறப்பு படை தொடங்கப்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் நபர்களை விரைவாக கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவியிடம் இருந்து தகவல்களை சேகரித்து, புகார் பதிவு செய்ய உதவியதுடன் குற்றவாளிகளை கைது செய்ய முக்கிய பங்காற்றிய பெண் உதவி ஆய்வாளர் தனபாக்கியலட்சுமி, பெண் தலைமை காவலர்கள் தேன்மொழி மற்றும் தமிழரசி ஆகியோரை மதுரை மாநகர காவல் ஆணையர் கபில்குமார் சரத்கர் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். சிங்கப்பெண் சிறப்பு படையின் முதல் அதிரடி நடவடிக்கையாக கருதப்படும் இந்த கைது நடவடிக்கை, மதுரை மாநகர பெண்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக காவல்துறையின் துரித செயல்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.