“ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டிக்கொலை” - பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் விபரீதம்.. ஆவடியில் பரபரப்பு!

அங்கிருந்து தனது வீட்டிற்குச் சென்று, கத்தியை எடுத்துக்கொண்டு வந்து சதீஷை சரமாரியாக வெட்டியதாக...
accust and victim
accust and victim
Published on
Updated on
1 min read

ஆவடியை அடுத்த பொத்தூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த 38 வயது நபர், பட்டப்பகலில் வழிமறித்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றது தெரியவந்துள்ளது. பொத்தூர் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (38). இவரது மனைவி மீனா (35). இவர்களுக்கு 11 மற்றும் 9ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். சதீஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை சதீஷ் இருசக்கர வாகனத்தில் பொத்தூர் ஆலமர பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மணிகண்டன் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், சதீஷிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. வாய்த்தகராறு முற்றிய நிலையில், அந்த நபர் அங்கிருந்து தனது வீட்டிற்குச் சென்று, கத்தியை எடுத்துக்கொண்டு வந்து சதீஷை சரமாரியாக வெட்டியதாக சொல்லப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், ஆவடி துணை காவல் ஆணையர் மற்றும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சதீஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட சதீஷுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பரத் (20) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு அதே பகுதியில் பேனர் வைப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதம் தொடர்ந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டு கொலை நடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

சதீஷை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற பரத், திருவள்ளூர் பகுதியில் பதுங்கியிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று பரத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா, இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆவடி அருகே ரியல் எஸ்டேட் தொழிலதிபர் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com