
இந்தியாவில் தம்பதியருக்கு இடையேயான வெறுப்புணர்வும் வன்முறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கணவன் மனைவியை விஷம் வைத்து கொல்வதும், மனைவி கணவனை கொலை செய்துவிட்டு, டிரம்மில் வைத்து அடைப்பதும் நாடு முழுக்க பெருகி வருகிறது. காதலற்ற திருமணங்கள் பெரும்பாலும் வன்முறையில் முடிகின்றன.
அப்படி ஒரு கோரமான சம்பவம் தான் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த டாக்டர் மகேந்திர ரெட்டி ஜி.எஸ். (வயது 31) இரைப்பை குடல் அறிவியல் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கிருத்திகா எம். ரெட்டி (வயது 28), இவர்களுக்கு கடந்த 2024 -ஆம் ஆண்டு திருமணமாகியது. திருமணமான நாளிலிருந்து கிருத்திகா அஜீரண கோளாறால் அவதிபட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கிருத்திகா திடீரென மயங்கி விழுந்துள்ளார். மகேந்திர ரெட்டி அவரை உடனே அருகில் இருந்த காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். ஆனால் அவர்கள் மருத்துவமனையை அடையும் முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர்கள் மரணச் சான்றிதழ் வழங்கியதும், பிரேத பரிசோதனை அவசியமாகியது. ஆனால் மகேந்திரா, காவேரி மருத்துவமனை மற்றும் போலீசாரிடம் பிரேத பரிசோதனை நடத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு அவரது மாமனாரும் (க்ரிதிகாவின் தந்தை) ஆதரவு தெரிவித்தார். இருப்பினும், போலீசார் பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர்.
ஆனால் அந்த பிரேத பரிசோதனையில்தான் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகியுள்ளன.
மகேந்திரா தனது மனைவிக்கு பிரோபொஃபால் (Propofol) என்ற மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக கொடுத்துள்ளது FSL (தடயவியல்) அறிக்கையில் தெரியவந்துள்ளது. இது அறுவை சிகிச்சைக்காக மனிதரை மயக்கமடையச் செய்ய பயன்படுத்தப்படும் மருந்து. முன்னதாக இது இயற்கை அல்லாத மரணம் எனக் கண்காணிக்கப்பட்டது. பின்னர்தான் தெரியவந்தது இது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்று.
ஆனால், கிழக்கு பகுதி உதவி கமிஷனர் (ACP) ரமேஷ் பனோத் கூறும்போது, “கிருத்திகா நீண்ட நாட்களாக ஜீரணக் கோளாறால் அவதிப்பட்டு வந்ததால், அதற்கு சிகிச்சையளிக்க முயன்றதாக மகேந்திரா கூறியுள்ளார். விசாரித்து வருகின்றோம்" எனக்கூறியுள்ளார்.
மேலும் கிருத்திகாவின் உடல்நிலை மிக மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கே ஏற்கனவே பல நோய்கள் இருந்ததாகவும், திருமணத்தின்போதே இதுகுறித்து சொல்லாமல் மறைத்ததால் மகேந்திரா தன் மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தார் மீது கடும் கோவத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மருமகனான மகேந்திரா ரெட்டியால் அதிக அளவு மயக்க மருந்து செலுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக, பெண்ணின் தந்தை கே. முனி ரெட்டி புதிய புகார் அளித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.