“திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட காதல்” - எதிர்ப்பு தெரிவித்து.. மகனை அடித்து கொன்ற தாய்.. கட்டில் முழுவதும் படிந்த ரத்தக்கறை!

அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்ததுடன்..
“திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட காதல்” - எதிர்ப்பு தெரிவித்து.. மகனை அடித்து கொன்ற தாய்.. கட்டில் முழுவதும் படிந்த ரத்தக்கறை!
Published on: 
Updated on: 
2 min read

பெங்களூருவில், வேறு ஜாதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயைக் காதலித்து திருமணம் செய்ய விரும்பிய மகனை, அவரது சொந்தத் தாயே உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், அவர் வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தபோது இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஜக்கேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதுடைய சிவம்மா. இவரது மகன் 33 வயதுடைய முத்துராஜ். இவர் பெங்களூரு மத்திகெரே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

வேலை நிமித்தமாக அங்கேயே தங்கியிருந்த முத்துராஜ், வாரம் ஒருமுறை மட்டும் விடுமுறை நாளில் சொந்த ஊருக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். அப்போதும் வீட்டில் தாங்காமல் கேட்டரிங் வேலைக்கு சென்று வந்துள்ளார். இதற்கிடையே, முத்துராஜுக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் பெண் தேடி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு ஏற்ற வரன் அமையாத நிலையில், முத்துராஜ் தன்னுடன் வேலை பார்த்த அல்லது பழக்கத்தில் இருந்த திருமணமான பெண் ஒருவரைக் காதலிக்கத் தொடங்கியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்ததுடன், அவர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த முத்துராஜ் இதுகுறித்து தனது தாய் சிவம்மாவிடம் தெரிவித்தபோது, அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதுடன், வேறு ஜாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்வதற்கு சிவம்மா சம்மதிக்கவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால், தாயின் எதிர்ப்பையும் மீறி அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என முத்துராஜ் பிடிவாதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், கடந்த (நவ 22) ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் முத்துராஜ் சொந்த ஊரான ஜக்கேனஹள்ளி கிராமத்திற்குச் சென்றிருந்த அவர் அன்று இரவு வீட்டிற்கு வெளியே கட்டில் போட்டு தூங்கிக்கொண்டிருந்தார். மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரி, முத்துராஜை எழுப்பச் சென்றுள்ளார். அப்போது கட்டில் முழுவதும் ரத்தம் பரவிய நிலையில், முத்துராஜ் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து குடும்பத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முத்துராஜின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்டமாக அவரது தாய் சிவம்மா மற்றும் சகோதரியிடம் விசாரணை நடத்தி நிலையில் இருவரும் கொலைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனக் கூறி அழுதுள்ளனர். இருப்பினும், சிவம்மாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சிவம்மாவே, வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த முத்துராஜை உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சிவம்மாவைக் கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்