“சடலத்தை கட்டிப்பிடித்து உறங்கிய நபர்” - நாள் முழுவதும் வீட்டில் இருந்த பிணம்.. நள்ளிரவில் நடந்தது என்ன?

இருவருக்கும் இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறுக்கும் இந்த மரணத்திற்கும் தொடர்பு உள்ளதா?..
Sivaganga woman found dead
Sivaganga woman found dead
Published on: 
Updated on: 
2 min read

சிவகங்கையில் சித்தாள் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நிலையில், அவரது உடலை கட்டிப்பிடித்தபடி கொத்தனார் ஒருவர் மது போதையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த நபரைப் பிடித்துச் சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஒளவையார் தெருவைச் சேர்ந்தவர் 60 வயதான ஜோதி. திருமணமாகாத இவர், சித்தாள் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

இதேபோல், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் கொட்ட குடியைச் சேர்ந்த ராசுக்குட்டி என்ற கொத்தனாரும் ஜோதியும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் (நவ 25) இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், இன்று(நவ 26) இருவரும் வேலைக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. வழக்கமாக இருவரையும் வேலைக்கு அழைத்துச் செல்லும் மேஸ்திரி, அவர்கள் வேலைக்கு வராததால் மாலையில் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார்.

வீட்டு வாசலில் நின்று நீண்ட நேரம் அழைத்தும் இருவரும் கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்த மேஸ்திரி, அவர்களது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த உறவினர் பெண், வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளார். வீட்டிற்குள் ஜோதி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவரது உடலைக் கட்டிப்பிடித்தபடி ராசுக்குட்டி மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜோதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மது போதையில் இருந்த ராசுக்குட்டியைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜோதி எப்படி உயிரிழந்தார்? இருவருக்கும் இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறுக்கும் இந்த மரணத்திற்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இருப்பினும் இது கொலையா? அல்லது உடல்நலக்குறைவால் ஏற்பட்ட மரணமா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையிலே முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சித்தாள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததும், அவரது உடலைக் கட்டிப்பிடித்தபடி கொத்தனார் மதுபோதையில் இருந்ததும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.