நெஞ்சை பதறவைத்த.. சிறுமியின் பாலியல் துன்புறுத்தல் வீடியோ! 3 குற்றவாளிகள் கைது.. 32 சமூக வலைதள கணக்குகள் மீது நடவடிக்கை?

இதுவரை 7 முதல் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...
bihar sexual assault case
Published on
Updated on
2 min read

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் 19-ம் தேதி அன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மற்றும் அவருடன் சென்ற சிறுவனை ஒரு கும்பல் தாக்கியதாகவும் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கண்டனத்தை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

காவல்துறையினரின் தகவலின்படி, பயிற்சி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி மற்றும் மாணவர் ஒருவர் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி வகுப்புகள் முடிந்த பிறகு புகைப்படம் எடுப்பதற்காக ஜமுய் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களை ஒரு கும்பல் வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பரவிய காணொளிகளில், அந்த கும்பல் இருவரையும் சுற்றி வளைத்திருப்பது தெரிகிறது. தங்களை அங்கிருந்து செல்ல அனுமதிக்குமாறு இருவரும் கெஞ்சியுள்ளனர். சிறுவனை சிலர் தாக்கியதுடன், அவரது சட்டைக் காலரைப் பிடித்து இழுத்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, சிறுமி மீதும் பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு காணொளியில், சிறுவன் தலையிட முயன்றபோது, சிறுமியை ஒருவர் தூக்கிச் செல்வது போன்ற காட்சிகள் நெஞ்சை பதற செய்தது. இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் இந்த சம்பவம் தொடர்பாக இருவரும் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. பின்னர் சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். காணொளியில் இடம்பெற்றிருந்த வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு, பாதிக்கப்பட்ட இருவரையும் காவல்துறையினர் கண்டறிந்ததாக ஜமுய் காவல் நிலைய அதிகாரி பிஸ்வஜீத் தயால் தெரிவித்தார் .

அதன்பின்னர் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. சிறுமி அளித்த எழுத்துப்பூர்வமான புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு வழங்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை மூன்று சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக ஜமுய் துணைப் பிரிவு காவல் அதிகாரியின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 முதல் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் காவல்துறையின் ரோந்து பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்படவுள்ளது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் முகம் அல்லது அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலான காணொளியை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படும் கணக்குகள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை 13 ஃபேஸ்புக் கணக்குகள், 12 இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் 7 எக்ஸ் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறார்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் காணொளிகளைப் பகிர்வது சட்டவிரோதம் என்றும், அவ்வாறு செய்பவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் கண்டு போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கைது நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு தொடர்பாக பீகாரில் அரசியல் விவாதமும் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மீதமுள்ள சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com