மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வரலாற்றுச் சாதனை படைத்து வெற்றி பெற்ற இரண்டே நாட்களில், அந்த மாநிலத்தின் முக்கியத் தலைவரான சுவேந்து அதிகாரியின் நேர்முக உதவியாளர் கொடூரமாகச் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா அருகே உள்ள மத்தியம்கிராம் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சுவேந்து அதிகாரியின் நீண்டகால விசுவாசியும், அவரது அரசியல் வேலைகளைக் கவனித்து வந்தவருமான சந்திரநாத் ரத் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவரை வழிமறித்துத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். நான்கு முறை சுடப்பட்டதில், மூன்று குண்டுகள் சந்திரநாத் ரத்தின் உடலில் பாய்ந்துள்ளன. கார் வேகம் குறைந்த ஒரு தருணத்தைப் பயன்படுத்தி, பின்தொடர்ந்து வந்த கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தின் காட்சிகள் பார்ப்பவர்களை அதிர வைக்கின்றன. சந்திரநாத் ரத் பயணித்த காரின் இடது பக்க கண்ணாடி குண்டுகள் பாய்ந்து சிதறிப் போயுள்ளது. பல ஆண்டுகளாக சுவேந்து அதிகாரியுடன் பயணித்து வந்த சந்திரநாத், அந்தத் தலைவரின் மிக நெருக்கமான வட்டத்தில் இருந்தவர். தகவல் அறிந்ததும் சுவேந்து அதிகாரி உடனடியாக மத்தியம்கிராம் மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த தனது உதவியாளரின் உடலைப் பார்த்து அவர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தார். இந்தத் தாக்குதலின் போது காரை ஓட்டி வந்த புத்ததேவ் என்பவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வட 24 பர்கானா மாவட்டத்தின் மத்தியம்கிராம் தொகுதியில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தத் தாக்குதல் நடந்தபோது சுவேந்து அதிகாரி காரில் இல்லை என்பதை அவரது சகோதரர் திவ்யேந்து அதிகாரி உறுதி செய்துள்ளார். இந்தத் திட்டமிட்ட படுகொலையின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சதி இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது ஒரு சாதாரணக் கொலை அல்ல, இதற்குப் பின்னால் ஒரு பெரிய சதித் திட்டம் ஒளிந்திருக்கிறது என்று பாஜக தலைவர்கள் கொந்தளித்துள்ளனர். குறிப்பாக, இது ஒரு 'கோல்ட் பிளட் மர்டர்' என்று வர்ணித்துள்ள சுவேந்து அதிகாரி, கொலையாளிகள் சில நாட்களாகவே தனது உதவியாளரை நோட்டமிட்டு (Reconnaissance) இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகளில் பாஜக ஆதரவாளர்களே ஈடுபட்டு வருவதாகவும், அமைதியைச் சீர்குலைக்க அவர்கள் முயற்சிப்பதாகவும் திரிணாமுல் தரப்பு தெரிவித்துள்ளது. மத்தியம்கிராம் தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் ரதின் கோஷ் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாஜக தொண்டர்கள் என்ற போர்வையில் சிலர் வன்முறையைத் தூண்டி வருவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது. பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
வன்முறையைக் கட்டுப்படுத்த கொல்கத்தா காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை சுமார் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 15 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஆணையர் அஜய் குமார் நந்த் தெரிவித்துள்ளார். பவானிபூர் தொகுதியில் மமதா பானர்ஜியை 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 'ஜெயண்ட் கில்லர்' என்று பெயர் எடுத்த சுவேந்து அதிகாரி, தற்போது முதலமைச்சர் பதவிக்கான ரேஸில் முன்னிலையில் இருக்கிறார். இத்தகைய முக்கியமான நேரத்தில் அவரது நெருங்கிய உதவியாளர் கொல்லப்பட்டது மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.