கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன்பாளையம் சிபிசி கார்டனில் வசித்து வருபவர் இளம் பெண் கவிதா. இவர் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் இளநிலை படித்த போது அவருடன் படித்த தோழியின் அண்ணன் முறையான கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கார்த்திக் சென்னையில் இருந்த நிலையில் இருவரும் அவ்வப்போது போனில் பேசுவது மெசேஜ் செய்து கொள்வது என நெருங்கி பழகி வந்திருக்கின்றனர். நாளடைவில் இவர்களது பழக்கமானது காதலாக மாறி இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசி பழகி வந்திருக்கின்றனர்.
எனவே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் கார்த்திக் நேரடியாக கவிதா வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் திருமணம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது கவிதாவின் பெற்றோர்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து கார்த்திக்கை கண்டித்து அனுப்பியதாக சொல்லப்படுகிறது. பின்னர் நாளடைவில் கார்த்திக் மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 31 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்ததால், கவிதா கார்த்திக் உடனான தனது காதலை முறித்துக் கொண்டார்.
ஆனால் கார்த்திக் விடாமல் தொடர்ந்து போனில் தொடர்பு கொண்டு தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்திருக்கிறார். மேலும் கவிதா படிக்கும் கல்லூரிக்கு நேரில் சென்று தகராறு செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த கார்த்திக் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கார்த்திக் தனது நண்பர்கள் 3 பேருடன் கேடிஎம் மற்றும் பல்சர் ஆகிய இரண்டு இருசக்கர வாகனங்களில் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று, வெளியில் நின்று கொண்டிருந்த தாளியூர் பேரூராட்சியில் பிட்டராக பணிபுரியும் இளம்பெண்ணின் தந்தை சுந்தரமூர்த்தியை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.
பின்னர் மண்ணெண்ணெய் நிரப்பிய பீர் மற்றும் மதுபான பாட்டில்களை கவிதாவின் வீட்டிற்குள் வீசியுள்ளார். இதில் ஒரு பாட்டில் வெடித்து வீட்டின் போர்டிகோ பகுதியில் இருந்த செருப்பு ஸ்டாண்ட் மீது விழுந்து எரிந்ததில் கேன்வாஸ் ஷு எரிந்து சேதமடைந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனவே அச்சமடைந்த சுந்தரமூர்த்தி இதுகுறித்து புகார் கொடுத்த நிலையில் 4 பேர் மீதும் தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.