
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஹபிபுன் நிஷா. இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். ஹபிபுன் நிஷாவின் ஜிம் ட்ரெய்னர் மற்றும் குடும்ப நண்பரான யாசர் அராபத், "பெண்கள் மாத சம்பளத்தில் மட்டும் முடங்கி விடக் கூடாது, தொழில் தொடங்க வேண்டும்" என கூறி நிஷாவை ஊக்குவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு நிஷா தொழில் தொடங்குவதற்கு என்னிடம் பணம் இல்லை என கூறி மறுத்துள்ளார். பணம் இல்லை எனச் சொல்லிய நிஷாவிடம், யாசர் அராபத் "உன் பெயரில் வங்கியில் ஒரு கோடி ரூபாய் லோன் எடுத்து தருகிறேன், கையெழுத்து மட்டும் போடு" என யாசர் கூறியுள்ளார்.
இதற்கு “நிஷா எனக்கு எப்படி ஒரு கோடி ரூபாய் வங்கி கடன் கிடைக்கும். எனக்கு ஏற்கனவே 15 லட்சம் ரூபாய் வங்கி கடன் உள்ளது என்னுடைய எலிஜிபிலிட்டி 15 லட்சம் தானே” என கேட்டுள்ளார். அதற்கு அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ கையெழுத்தை மட்டும் போடு என யாசர் அராபத் கூறியுள்ளார். இதன் மூலம் நிஷா பெயரில் சுமார் 60 லட்சம் ரூபாய் கடன் வாங்கி அந்த பணத்தை 4 வங்கிகளில் இருந்து மோசடி முறையில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பணத்தை யாசர் தனது கணக்குகளுக்கு மாற்றி, நாம் இருவரும் சேர்ந்து ஹோட்டல் தொடங்குவோம் என கூறியுள்ளார்.
பின்னர் யாசர் அராபத் கூறியது போல “பகுஸ் பிரபுஸ் அண்ட் ரெஸ்டாரன்ட்” என்ற ஹோட்டல் தொடங்கியுள்ளார். ஆனால், அந்த ஹோட்டலில் இரவு நேரங்களில் பெண்களை அழைத்து வந்து மது, கஞ்சா போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனை எதிர்த்து நிஷா ஓட்டல் கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். அதற்கு யாசர் அவரை அவதூறாக திட்டி, மிரட்டியுள்ளார். இதனால் நிஷா மற்றும் அவரது சகோதரர்கள் யாசர் வீட்டிற்கு சென்று ஓட்டல் கணக்குகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு யாசர் அராபத் சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.
எனவே நிஷா யாசர் அராபத்தை காவல் நிலையத்திற்கு சென்று பார்த்துக் கொள்ளலாம், என கூறி காவல் நிலையம் அழைத்துள்ளார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த யாசர் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து செருப்பால், துடைப்பத்தால் தாக்கியுள்ளனர். இதனை நிஷாவின் உடனிருந்த மற்ற சகோதரர்கள் வீடியோ எடுத்துள்ள நிலையில் அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நிஷா தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போதும், "இது சிவில் கேஸ், கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள்" என போலீசார் அலட்சியமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சிலம்பரசன் எனும் குற்ற பிரிவு உதவி ஆய்வாளர், யாசருக்கு ஆதரவாக பேசி, "ஹோட்டலின் பூட்டை உடைத்து நீங்களே நடத்துங்கள்" எனக் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தனது பெயரில் 60 லட்சம் ரூபாய் கடன் சுமத்தப்பட்டதாலும், காவல் துறையின் அலட்சியத்தாலும் மன அழுத்தத்தில் ஆழ்ந்த நிஷா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.