செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருத்தேரி விஞ்சியம்பாக்கம் பகுதியில் வீடு வாடகை எடுத்து திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பாரதிகண்ணன் மற்றும் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ராஜன் மற்றும் சக நண்பர்களுடன் ஒன்றாக தங்கி இருந்தனர். அப்போது தூத்துக்குடி பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான 26 வயதுடைய பாலகிருஷ்ணன் என்பவருக்கும் பாரதி கண்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்பு இருவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது, கஞ்சா அடிப்பது, வெளியே ஊர் சுற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பாக பாலகிருஷ்ணன் அவரது நண்பரான 22 வயதுடைய பூபதி மற்றும் 19 வயதுடைய ராஜராஜன் ஆகியோரை பாரதி கண்ணன் தங்கி இருக்கும் அறைக்கு அழைத்து வந்து ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து பாரதி கண்ணன் பாலகிருஷ்ணன் இடம் “இனிமேல் உன் நண்பர்களை இங்கு அழைத்து வராதே இங்கு பணம் திருடு போகிறது” என கண்டித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப் 21) ஆம் தேதி வழக்கம் போல பாலகிருஷ்ணன் தனது நண்பர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு பாரதி கண்ணன் ரூமிற்கு சென்று ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது பாரதி கண்ணனுக்கும் பாலகிருஷ்ணனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது “நான் ஏற்கனவே சொன்னேன் நீ மட்டும் வரதா இருந்தா வா இல்லை என்றால் உன் நண்பர்களை இங்கு அழைத்து வராதே இங்கே பணம் திருடு போகிறது” என பாலகிருஷ்ணன் நண்பர்கள் மீது பாரதி கண்ணன் திருட்டு பட்டம் கட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் அங்கிருந்து புறப்பட்டு விட்டு மீண்டும் மது அருந்திவிட்டு அதீத மது போதையில் தங்கள் நண்பர்களுடன் பாரதி கண்ணன் தங்கியிருந்த அறைக்கு சென்று பீர் பாட்டிலை உடைத்து பாரதி கண்ணனை சரமாரியாக தலை கண், காது வயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குத்தி உள்ளார். இதனை தடுக்கச் சென்ற ராஜன் என்பவருக்கும் காயங்கள் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பாரதி கண்ணன் உயிரிழந்த நிலையில் தகவல் அறிந்து வந்த மறைமலை நகர் போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மதுரை நீதிமன்றத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி பாலகிருஷ்ணன் சரணடைந்தார். அதனை தொடர்ந்து இருவரை வலை வீசி தேடி வந்த நிலையில், இருவரும் பூந்தமல்லி பகுதியில் தங்கியிருப்பதாக மறைமலை நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பூபதி மற்றும் ராஜராஜன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில் என் நண்பர் மீதும் எங்கள் மீதும் திருட்டு பட்டம் கட்டியதால் அவனை கொலை செய்தோம் என பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். பின்பு இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்கள் வைத்திருந்த செல்போன், அரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர. மறைமலைநகர் அருகே சக நண்பன் மீது திருட்டு பட்டம் கட்டியதால் ஒருவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.