“பால் பண்ணையில் நடந்த பாலியல் சீண்டல்” - வழக்கு பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை.. சிறுமி தற்கொலை முயற்சி!

அலுவலகத்தில் இருந்து புகார் மனு விசாரணைக்காக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது..
“பால் பண்ணையில் நடந்த பாலியல் சீண்டல்” - வழக்கு பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை.. சிறுமி தற்கொலை முயற்சி!
Published on
Updated on
2 min read

தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டியை சேர்ந்தவர்கள் ராஜன் ஜெயஸ்ரீ தம்பதியினர். இந்த தம்பதியினர் தங்களது இரண்டு மகள்கள் உடன் ஊஞ்சாம்பட்டி தெற்கு தெருவில் வசித்து வருகின்றனர். கணவர் ராஜன் மதுரையில் பணிபுரிந்து வரும் நிலையில் ஜெயஸ்ரீ ஊஞ்சாம்பட்டியிலேயே பால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த (மே 11) ஆம் தேதி பால் பண்ணைக்கு ஜெயஸ்ரீ யின் 15 வயது மூத்த மகள் சென்ற நிலையில் அங்கு வந்து மாடுகளுக்கு பால் கறக்கும் பால் கறவைக்காரர் ரமேஷ் என்ற நபர் தனியாக இருந்த ஜெயஸ்ரீயின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடி வந்த சிறுமி இது குறித்து தனது தாயாரிடம் கூறியதையடுத்து இந்த சம்பவம் குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பால் பண்ணையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களுடன் ஜெயஸ்ரீ புகார் அளித்தார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து புகார் மனு விசாரணைக்காக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் துறையினர் கடந்த ஜூன் மாதம் நான்காம் தேதி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காக சிறுமி வன்கொடுமை சட்டத்தின்படி ரமேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Admin

ஆனால் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று வரை நான்கு மாதங்களாக ரமேஷ் மீது கைது நடவடிக்கை எடுக்கபடவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சிறுமி வீட்டில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த சிறுமியின் தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனவே சிறுமி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஜெயஸ்ரீ “ ரமேஷ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு மட்டும் செய்து கடந்த நான்கு மாதங்களாக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அடிக்கடி பாதிக்கப்பட்ட தங்களை மட்டும் விசாரணை செய்துவிட்டு அனுப்பி வைத்து அலைக்கழித்து வருவதாகவும் இதனால் தங்களது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்காத விரக்தியால்தான் தனது மகள் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடி வருகிறார்” என வேதனை தெரிவித்துள்ளார்.

Admin

மேலும் சம்பந்தமில்லாத சில நபர்கள் தொலைபேசி வாயிலாக ரமேஷிற்கு ஆதரவாக வழக்கை வாபஸ் பெறும்படி கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறிய சிறுமியின் தாயார் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ரமேஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக கொலை மிரட்டல் விடுபவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த சம்பவத்திற்கு பிறகு பால் பண்ணை நடத்த முடியாத சூழல் நிலவியதால் அதையடுத்து பால்பண்ணையை மூடிவிட்டதால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com