“மனைவிகளை வைத்து வாக்குவாதம் செய்த கணவர்கள்” - தொடர்ந்து வசைபாடிய தாய்.. விடாமல் துரத்தி கொலை செய்த குற்றவாளி!
சென்னை அம்பத்தூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம். இவர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு ராணி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீனிவாசன் மீது சுற்று வட்டார காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ள நிலையில் ஒரு குற்ற வழக்கின் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்த நிலையில் தினமும் இரவு வேலை முடிந்தது ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். அவ்வாறு மது அருந்தும்போதும் அருணாச்சலம் சீனிவாசனின் மனைவியை பற்றி தவறாக பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த சீனிவாசன் அருணாசலத்தின் மனைவி மற்றும் குடும்பத்தை பற்றி தவறாக பேசி வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே இருந்த நட்பு பகையாக மாறியுள்ளது. அவ்வப்போது இருவரும் சந்தித்து கொள்ளும் போது வாக்குவாதம் செய்துள்ளனர்.
அருணாச்சலம் சீனிவாசன் இருவருக்கும் மட்டும் இருந்த தகராறு குடும்ப சண்டையாக மாறியுள்ளது அருணாசலத்தின் தாய் சீனிவாசனை பார்க்கும் போதெல்லாம் வசை பாடி வந்துள்ளார். இதனால் மிகுந்த ஆத்திரம் அடைந்த சீனிவாசன் அருணாச்சலத்தை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி தனது மனைவியின் தங்கை கணவனையும் உடன் கூட்டு சேர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் அனைவருடனும் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்த அருணாச்சலத்திற்கு சீனிவாசன் போன் செய்துள்ளார்.
அருணாச்சலத்தை வீட்டிற்கு வெளியில் வருமாறு அழைத்துள்ளார். வெளியே வந்த அருணாச்சலத்திடம் சீனிவாசன் வேண்டும் என்றே வாக்குவாதம் செய்து வம்பிழுத்துள்ளார். இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றிய நிலையில் சீனிவாசன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருணாச்சலத்தை தாக்கியுள்ளார். சுதாரித்து கொண்டு அருணாச்சலம் சீனிவாசனிடமிருந்து தப்பி ஓடியுள்ளார். இருப்பினும் விடாமல் துரத்திய சீனிவாசன் மற்றும் வினோத் அருணாச்சலத்தை குத்தி கொலை செய்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருணாசலத்தின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அருணாச்சலத்தை குத்திவிட்டு தப்பி சென்ற சீனிவாசன் மற்றும் வினோத்தை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் வைத்து ஒருவர் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.