“வேலை முடிந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் சீண்டல்” - இரவில் கேட்ட அலறல் சத்தம்.. தடுக்க வந்த நண்பர்கள் மீதும் தாக்குதல்!

அவரது நண்பர்கள் அங்கு வந்து 3 பேரையும் தடுக்க முயற்சித்ததாக சொல்லப்படுகிறது...
Chennai Ashok Nagar Sexual Harassment Case
Chennai Ashok Nagar Sexual Harassment Case
Published on
Updated on
1 min read

சென்னை, அசோக் நகரில் இரவு நேரத்தில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதைத் தடுக்க வந்த அவரது நண்பர்களை தாக்கியதாகவும் கூறப்படும் 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அசோக் நகரில் வசித்து வரும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள தனியார் அழகு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த (செப் 20) அன்று இரவு வழக்கம் போல் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

அசோக் நகர் 15வது தெரு, 2வது அவென்யூ சந்திப்பு அருகே சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் அந்தப் பெண்ணை வழிமறித்து கிண்டல் செய்ததுடன், தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தத்தைக் கேட்டு, அதே பகுதியில் பணியாற்றும் அவரது நண்பர்கள் அங்கு வந்து 3 பேரையும் தடுக்க முயற்சித்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது அந்த நபர்கள், தடுக்க வந்த நண்பர்களை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பொதுமக்கள் அங்கு திரண்டதால், 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அசோக் நகர் R-3 காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், அதைத் தடுக்க வந்த நண்பர்களையும் தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

R-3 அசோக் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் அசோக் நகரைச் சேர்ந்த ராபின் நெல்சன் (22), விஷ்ணுகுமார் (25), மனோகார்த்திக் (19) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் (செப் 21) கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில், ராபின் நெல்சன் தனியார் கல்லூரியில் படித்து வருவதும், விஷ்ணுகுமார் பெயிண்டராகவும், மனோகார்த்திக் மெக்கானிக்காகவும் பணியாற்றி வருவதும் தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அவர்களை நேற்று(செப் 22) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com