

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டை பராக்கா இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதுடைய சீனிவாசன். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தனது வீட்டின் அருகே இருந்த போது சுமார் ஐந்து பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து சீனிவாசனின் மகன் கார்த்திக் என்பவரை வெட்ட முயற்சித்துள்ளனர். கார்த்திக் வீட்டிற்குள் சென்று தாழ்ப்பாள் போட்டுக் கொண்டதால் அவரை தாக்க முடியாத கும்பல் ஆத்திரத்தில் வெளியே நின்று கொண்டிருந்த அவரது தந்தையை சரமாரியாக வெட்டியது. இதில் சீனிவாசனுக்கு கை கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயக்கமானார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சீனிவாசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் சீனிவாசனின் மகன் கார்த்திக் என்பவர் சரித்திர பதிவேடு ரவுடி என்பது தெரியவந்தது. இவருக்கும் ஓட்டேரி பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பிரசாந்த் என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
பிரசாந்த் அதே பகுதியை சேர்ந்த கீதா என்ற திருநங்கையை காதலித்து திருமணம் கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். கார்த்தி தனது நபர் பிரசாந்த் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த நிலையில் பிரசாந்த் குற்ற வழக்கில் சிக்கி சிறைக்கு செல்லும் போது திருநங்கை கீதாவிடம் கார்த்திக் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். பிரசாந்த் சிறையில் இருந்த நிலையில் இதுகுறித்து கீதா போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் கார்த்திக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமினில் வெளியே வந்த கார்த்திக் பிரசாந்த் தன்னை ஏதாவது செய்து விடுவான் என்று எண்ணி வெளியூருக்கு சென்று விட்டார். பின்னர் தீபாவளிக்கு வீட்டிற்கு வந்த கார்த்திக் பெற்றோர்களின் அறிவுறுத்தலின் பேரில் வீட்டிலேயே தாக்கியுள்ளார். இந்நிலையில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் இருந்த பிரசாந்த் மீண்டும் ஜாமீனில் வெளியே வந்து கார்த்திக் வீட்டில் இருப்பதை அறிந்து நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் வந்து அவரை கொலை செய்ய முயற்சி செய்தபோது அதில் அவர் தப்பித்து அவரது தந்தை சிக்கிக் கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து நேற்று இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டேரி எஸ்.வி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த். புவன் 19. திருநங்கையான கீதா 26 மற்றும் 15 வயது சிறுவர்கள் இரண்டு பேர் என 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பிரசாந்த் மற்றும் புவன் ஆகியோரை போலீசார் பிடிக்க முயற்சி செய்தபோது தப்பித்து ஓடியதில் கீழே விழுந்து அவர்களது கை உடைந்தது போலீசார் அவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவுக்கட்டு போட்டனர். அதன் பிறகு திருநங்கை கீதா. குள்ள பிரசாந்த். புவன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் இருவரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.