

சென்னை பெரவள்ளூர் வெற்றி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (68). இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு நடராஜன் (45) என்ற மகனும் உள்ளார். நடராஜன் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி எழிலா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் தந்தை ராஜேந்திரன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கீழே விழுந்து இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடராஜனின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் வேளாங்கண்ணிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்றுள்ளனர். நேற்று மதியம் 2 மணி அளவில் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது எழிலாவின் கணவர் நடராஜன் மது போதையில் வீட்டில் இருந்துள்ளார். மேலும் அவரது மாமனார் ராஜேந்திரன் படுக்கையில் சிறுநீர் மற்றும் மலம் கழித்த நிலையில் உதவி இன்றி இருந்துள்ளார். இதனைக் கண்டு கணவர் நடராஜனிடம் “உங்க அப்பாவ உங்களால் பார்த்துக் கொள்ள முடியாதா? வீட்டை இப்படி வைத்து உள்ளீர்களே” என கேட்டுவிட்டு எழிலா தனது அறைக்குள் சென்று படுத்து உறங்கியுள்ளார்.
சிறிது நேரத்தில் ராஜேந்திரனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்தபோது மார்பில் ரத்தம் சொட்ட சொட்ட மயக்க நிலையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த எழிலா மற்றும் அவரது பிள்ளைகள் ராஜேந்திரனை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்த போது மருத்துவர்கள் ராஜேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து திரு வி க நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலையடுத்து திருவிக நகர் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் மது போதையில் இருந்த நடராஜன் தனது மனைவி திட்டியதை மனதில் வைத்துக் கொண்டு தனது தந்தை படுக்கையில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்று எண்ணி அவரை வீட்டில் சமையல் அறையில் இருந்த கத்தியால் கொலை செய்து விட்டால் பிரச்சனை இருக்காது என்று எண்ணி அவரை கத்தியால் குத்தியது தெரியவந்தது.
இதையடுத்து மது போதையில் இருந்த நடராஜனை கைது செய்த திருவிக நகர் போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சொத்த அப்பாவை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்