

சென்னை பள்ளிக்கரணை அடுத்த எஸ். கொளத்தூர் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி (27) என்ற பெண்ணிற்கு கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டி அருகே உள்ள ஈச்சாங்கரணி பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது புவனேஸ்வரிக்கு 50 சவரன் தங்க நகை போட்டதாகவும், மாப்பிள்ளை ஜானகிராமனுக்கு 20 சவரன் தங்க நகை போட்டதாகவும் புவனேஷ்வரியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று எஸ்.கொளத்தூரில் உள்ள அம்மா வீட்டில் இருந்த புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் குழந்தையை தாலாட்ட கட்டப்பட்டுள்ள புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.புவனேஸ்வரியின் தாய் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் அம்மன் கோயிலில் திருவிழா நடைபெறுவதால் கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய போது அறை பூட்டி இருந்ததால் சத்தமாக புவனேஸ்வரியை கூப்பிட்டுள்ளனர். அதற்கு எந்த ஒரு பதிலும் வராததால் கதவை தட்டியுள்ளனர் அப்பொழுதும் எந்த ஒரு பதிலும் வராததால், பயந்து போய் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அவரது தாய் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புவனேஸ்வரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளனர். புவனேஸ்வரிக்கு 200 சவரன் தங்க நகை போட சொன்னதை எங்களால் செய்ய முடியவில்லை என்றும் எனது பெண்ணை தொடர்ந்து அவரது நாத்தனார் மற்றும் கணவர் வீட்டின் மூத்த மருமகன் ஆகியோர் தொடர்ந்து புவனேஸ்வரியை கொடுமைப்படுத்தி வந்ததாகவும் தற்கொலை செய்து கொண்ட புவனேஸ்வரியின் தாய் குமுதா கூறினார்.
மேலும் திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து குடும்பத்தில் பிரச்சனைகளும், மனரீதியான துன்பங்களும் இருந்ததாக புவனேஸ்வரி தாய், சகோதரி உள்ளிட்ட குடும்பத்தாரிடம் சொல்லி வந்ததாக கூறியுள்ளனர். புவனேஸ்வரி - ஜானகிராமன் தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து அந்த குழந்தைக்கு கடந்த 16ம் தேதி முதல் பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளனர். அந்த பிறந்தநாள் விழாவில் குழந்தைக்கு 20 சவரன் தங்க நகை கேட்டதாகவும், புவனேஸ்வரியின் தாய் வீட்டில் குழந்தைக்கு 2 சவரன் மட்டும் போட்டதாகவும், அவர்கள் கேட்டப்படி 20 சவரன் போடாததால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வியாழக்கிழமை அன்று புவனேஸ்வரி அம்மாவின் ஊரில் கோயில் திருவிழாவை காரணம் காட்டி அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். கணவன் ஜானகிராமன் தான் புவனேஸ்வரியை அம்மா வீட்டில் விட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நேற்று மாலை புவனேஸ்வரி அவரது கணவர் ஜானகிராமனிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது “நீ வீட்டிற்கு வர வேண்டாம் உங்க அம்மா வீட்டிலேயே இரு” என்று கணவன் கூறியதாகவும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் புவனேஸ்வரியின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
புவனேஸ்வரி சிறிய விஷயத்திற்கு எல்லாம் தற்கொலை செய்து கொல்லக்கூடிய அளவிற்கு ஒரு முடிவை எடுக்கக்கூடிய பெண் கிடையாது. அவர் பட்டப்படிப்பு படித்துள்ளார் என்றும் பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவியாக வந்தவர். அதுமட்டுமில்லாமல் ஒரு பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார் என்றும் தெரிவித்தனர்.
மேலும் கணவன் ஜானகிராமன் மட்டுமல்லாமல் அவருடைய தாய், தந்தை, தங்கை உள்ளிட்டோரும் புவனேஸ்வரியை தொடர்ந்து கொடுமைபடுத்தி வந்ததாகவும் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார் திருமணம் ஆகி இரண்டு வருடத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் இந்த வழக்கை கிண்டி கோட்டாட்சியர் விசாரிக்க வழக்கை மாற்றியுள்ளனர்.
புகார் அளித்த புவனேஸ்வரியின் தாய், “கணவன் ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் முறையாக விசாரித்து, புவனேஸ்வரிக்கு ஏற்பட்ட மனரீதியான துன்பத்திற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்” என்றும் “எங்கள் வீட்டு பெண்ணின் மரணத்திற்கான நீதி கிடைக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்