சென்னை தியாகராய நகர், குப்புசாமி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 80 வயதுடைய ராதா என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஒரு மகன் வெளிநாட்டிலும், மற்றொரு மகன் பெசன்ட் நகரிலும், மகள் டெல்லியிலும் வசித்து வருகின்றனர். கடந்த (ஆக 13) ஆம் தேதி காலை, பெசன்ட் நகரில் வசித்து வரும் ராதாவின் மகன் ராம்ஜி யாதவ், தனது தாயை பல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பின்னர் மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு சிறிது நேரம் தாயுடன் பேசிய பிறகு அவர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை ராதாவின் மேல் வீட்டில் வசித்து வரும் விஜய் ஆதிராஜ் என்பவர் ராம்ஜி யாதவை தொடர்புகொண்டு, ராதாவின் வீடு நீண்ட நேரமாக பூட்டியிருப்பதாகவும், காலிங் பெல் அடித்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் எந்த பதிலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராம்ஜி யாதவ் உடனடியாக தாயின் வீட்டிற்கு சென்று மாற்றுச் சாவி மூலம் கதவை திறந்துள்ளார். அப்போது ராதா மூக்கில் ரத்தக் காயத்துடன் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், அவர் அணிந்திருந்த தங்கச் செயின், வளையல், வைரக் கம்மல், மோதிரம் உள்ளிட்ட நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், R-4 சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மூதாட்டியின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேனாம்பேட்டை சரக காவல் உதவி ஆணையர் தலைமையிலும், R-4 காவல் ஆய்வாளர் தலைமையிலும் தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்றது. விசாரணையில், ராதாவின் வீட்டில் கடந்த 5 மாதங்களாக 36 வயதுடைய மேனகா என்ற பெண் வேலை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மேனகாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. ராதா வீட்டில் தனியாக வசித்து வருவதையும், அவர் அணிந்திருக்கும் நகைகள் குறித்தும் அறிந்திருந்த மேனகா, நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக ஏற்கனவே பழக்கமான மௌலி என்ற சந்திரமௌலி (26), மணிகண்டன் (24) ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டதாகவும், கடந்த 13ஆம் தேதி மாலை மூவரும் ராதாவின் வீட்டிற்குச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அப்போது மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகள், வீட்டில் இருந்த வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.2,000 பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆதாயக் கொலை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மேனகா (எ) அம்மு, மௌலி (எ) சந்திரமௌலி மற்றும் மணிகண்டன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 8 சவரன் தங்க நகைகள், தங்க வளையல், மோதிரம், வைரக் கம்மல், வெள்ளிப் பொருட்கள், ரூ.2,000 பணம் மற்றும் குற்றத்துக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், மௌலி மீது ஏற்கனவே 2 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். நகைகளுக்காக தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டியை அவரது வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணே நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் தி.நகர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்