“பெண்கள் கழிவறையில் இருந்த ரகசிய கேமரா” - இரவு நேரங்களில் கழிவறைக்கு சென்ற ஆண் மேலாளர்.. விசாரணையில் வெளிவந்த பின்ணணி!

அங்கிருந்த வாஷ்பேசினுக்கு அடியில் சிறிய அளவிலான கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்...
Chennai hidden camera case
Chennai hidden camera case
Published on: 
Updated on: 
1 min read

சென்னை வானகரத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ பதிவு செய்ததாக எழுந்த புகாரில், அந்த நிறுவனத்தின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கழிவறையில் வாஷ்பேசினுக்கு அடியில் சிறிய அளவிலான கேமரா பொருத்தப்பட்டிருந்ததைக் கண்டு பெண் ஊழியர் ஒருவர் அதிர்ச்சியடைந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் மேலாளரின் செயல் அம்பலமாகியுள்ளது. அவரிடமிருந்து ரகசிய கேமரா மற்றும் இரண்டு விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை வானகரம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், வழக்கம்போல் பெண்கள் பயன்படுத்தும் கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த வாஷ்பேசினுக்கு அடியில் சிறிய அளவிலான கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, உடனடியாக நிறுவன நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் அளித்தார். மேலும், வானகரம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்த 38 வயதுடைய வன்னியராஜ் என்பவர், சில நாட்களாக இரவு நேரங்களில் பெண்கள் கழிவறைக்குள் சென்று நீண்ட நேரத்துக்குப் பிறகு வெளியே வந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், வன்னியராஜை அழைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தியதை அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, ஆவடியைச் சேர்ந்த வன்னியராஜை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து சிறிய ரக ரகசிய கேமரா மற்றும் இரண்டு விலை உயர்ந்த செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்கள் பணிபுரியும் நிறுவனத்திலேயே, அவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதாக எழுந்துள்ள இந்தப் புகார் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.