

ராஜஸ்தானைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்ற இளைஞர் அளித்த பரபரப்பு புகாரின் அடிப்படையில் அவரது மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் மனைவி பெங்களூருவில் இருப்பதாகவும், விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன் அசாமில் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞரை, இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி மனைவியும் மாமியாரும் கட்டாயப்படுத்தியதாகவும், போதைப்பொருள் கொடுத்து அவரது விருப்பத்திற்கு எதிராக சுன்னத் செய்ததாகவும் எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகில்குமார் சந்தக் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மனைவி நூர்ஷிகா பேகம் (24), மாமியார் நூர் காதுன் (36) ஆகிய இருவர் மீதும் அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள பங்காகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் அவரின் மாமியார் நூர் காதுன் கைது செய்யப்பட்டுள்ளார். அதையடுத்து மனைவியிடம் விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அகில்குமார் சந்தக், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் நூர்ஷிகா பேகத்தை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டு, பின் காதலாக மாறியுள்ளது. அதையடுத்து அசாமில் நீதிமன்றம் மூலம் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் சுமார் மூன்று ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.
ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே மதம் தொடர்பாக எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்று அகில் தெரிவித்துள்ளார். ஆனால், நூர்ஷிகா ஒரு இந்துவைத் திருமணம் செய்துகொண்டது அவரது குடும்பத்தினருக்கும், கிராம மக்களுக்கும் தெரியவந்த பிறகு நிலைமை மாறியதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, அகில்குமார் தன் மனைவி சிந்தூர் அணிந்திருந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட பிறகு, இவரை மதம் மாற வற்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு நூர்ஷிகா தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அதன்பிறகு, குடும்பப் பிரச்சினைகளைப் பேசி தீர்த்துக்கொள்ளலாம் எனக் கூறி, அவரது மாமியார் அகிலை அசாமுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி, ஜலுக்பாரி பகுதிக்குச் சென்ற அகிலை, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் உறவினர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு காரில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் குவஹாத்தியில் உள்ள டிவி டவர் அருகேயுள்ள தனிமையான பகுதிக்குக் காரை எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு தனக்கு போதை தரும் பொருள் கொடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகு தனது விருப்பத்திற்கு எதிராக காருக்குள்ளேயே சுன்னத் செய்யப்பட்டதாகவும் அகில் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மாட்டிறைச்சி சாப்பிட மறுத்தபோதும் அதைச் சாப்பிடும்படி கட்டாயப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தனது பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இஸ்லாம் மதத்திற்கு மாறியதை முறைப்படி அறிவிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டதாக அகில் கூறியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக இந்த அழுத்தம் அதிகரித்ததால், காவல்துறையை அணுக முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். புகார் அளித்ததைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் தடயவியல் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தனது மாமியாரே முக்கியக் காரணம் என்றும், மாமனார் தன்னை ஒருபோதும் மதம் மாறும்படி கட்டாயப்படுத்தவில்லை என்றும் அகில் தெரிவித்துள்ளார். அகில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாமியார் நூர் காதுனைக் கைது செய்துள்ளனர். அவரது மனைவி நூர்ஷிகா தற்போது பெங்களூருவில் இருப்பதாகவும், விசாரணையில் ஆஜராகுமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நூர்ஷிகாவின் தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான முழு பின்னணி, அதில் தொடர்புடைய நபர்களின் பங்கு உள்ளிட்ட விவரங்கள் குறித்து அசாம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.