
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கூடுதுறை மலை பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதுடைய சங்கர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பத்திரம்மாள் என்பவருடன் திருமணமாகி ஒரு மகள் உள்ள நிலையில் சங்கர் கூலி வேலை செய்து வந்தார். கூடுதுறையில் பத்திரம்மாளின் தாய் வீட்டிற்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டில் பத்திரம்மாள் மற்றும் அவரது சகோதரிகள் ரங்கம்மாள், செல்வி ஆகிய மூவருக்கும் சரிபங்கு இருக்கிறது.
இந்நிலையில் அந்த வீட்டில் ரங்கம்மாள் என்பவரின் மகன் விக்னேஷ் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். குடும்ப சூழ்நிலையின் காரணமாக மேற்படி வீட்டை விற்க வேண்டி பத்திரம்மாளின் கணவர் சங்கர் என்பவர் முடிவு செய்துள்ளார் அதற்கு செல்வி மற்றும் ரங்கம்மாளும் சம்மதம் தெரிவித்த நிலையில் சங்கர் விக்னேஷ் இடம் வீட்டை காலி செய்து தருமாறு கூறியுள்ளார். ஆனால் விக்னேஷ் வீட்டை காலி செய்து கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இதனால் சங்கருக்கும் விக்னேஷ் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுவந்துள்ளது. இதன் காரணமாக விக்னேஷ் மற்றும் சங்கருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளும் போதெல்லாம் சண்டை போட்டு வந்துள்ளனர். அதே போல் நேற்று மாலை விக்னேஷ் மது அருந்தி விட்டு வந்து தனது சித்தப்பாவான சங்கரிடம் வீட்டை காலி செய்ய முடியாது என தகராறு செய்துள்ளார். வீட்டில் இருந்த சங்கரின் மகள் மற்றும் மனைவி இருவரும் சமாதானப்படுத்திய நிலையில் விக்னேஷ் தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் சுக்கு காபி கடை அருகே விக்னேஷ் நின்று கொண்டிருந்தபோது அங்கு சென்ற சங்கர் எதற்கு இப்படி குடிபோதையில் தகராறு செய்கிறாய் என விக்னேஷ் இடம் கேட்டுள்ளார். இதனால் மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி போய் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு ரோட்டில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டனர். அப்போது ஆத்திரத்தில் ரோட்டில் கிடந்த கல்லை எடுத்து விக்னேஷ் தனது சித்தப்பா சங்கரை தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்த சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்னகாமணன், உதவி ஆய்வாளர் ஆனந்த் குமார் மற்றும் போலீசார் சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுரோட்டில் சண்டை போட்டு கொலை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.