“நள்ளிரவில் தனியாக இருந்த பெண்.. அத்துமீற முயன்ற வாலிபர்” - திடீரென பாய்ந்த நாய்கள்.. வெளியான சிசிடிவியில் நடந்த அதிசயம்!

அந்த இளைஞர் சாலையோரம் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்...
Coimbatore Woman Assault Attempt
Coimbatore Woman Assault Attempt
Published on
Updated on
2 min read

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் சாலையோரம் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீற முயன்றதாக கூறப்படும் இளைஞரை, அங்கு இருந்த வளர்ப்பு நாய்கள் துரத்தி கடித்து பெண்ணை காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை துடியலூர் அருகே உள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனி, அசோகபுரம் பகுதியில் பெட்டிக்கடை ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றிய போலீசார், தீ வைப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு, பெட்டிக்கடை தீ வைப்பு சம்பவத்தை விட அதிர்ச்சியளிக்கும் மற்றொரு காட்சி பதிவாகியிருந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று அதிகாலை சுமார் 2 மணியளவில், அசோகபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே சாலையோரமாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக கஞ்சா மற்றும் மது போதையில் சென்ற இளைஞர் ஒருவரை அப்பகுதியில் இருந்த இரண்டு நாய்கள் குரைத்தபடியே பின்தொடர்ந்திருக்கின்றன.

இதையடுத்து பெண்ணிடம் அந்த இளைஞர், "இது உங்க நாயா பாரு... பின்னாடியே வந்துட்டு இருக்கு!" எனக் கேட்டு உள்ளார். அதற்கு அந்தப் பெண், "கல்லை எடுத்து அடிங்க... நாய் ஓடிவிடும், இதுகூட தெரியாதா?" எனக் கூறி உள்ளார். பின்னர் இளைஞர் கல்லை எடுத்து நாய்கள் மீது வீச சிறிது தூரம் சென்ற நாய்கள் மீண்டும் திரும்பி வந்து இளைஞரைப் பார்த்து குரைத்தபடி இருந்துள்ளன. அப்போது, போதையில் இருந்த அந்த இளைஞர் சாலையோரம் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அலறி சத்தமிட்டுள்ளார்.

Coimbatore Woman Assault Attempt
Coimbatore Woman Assault Attempt

பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டதும் அங்கிருந்த இரண்டு நாய்களும் உடனடியாக இளைஞரை நோக்கிப் பாய்ந்தது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து நாய்கள் இளைஞரின் கால்களை கடித்து, அவரை பெண்ணிடம் நெருங்கவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நாய்கள் தாக்கியதால் நிலைகுலைந்த இளைஞர், பெண்ணை விட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இந்த காட்சிகளை ஆய்வு செய்த துடியலூர் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்டது கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த பூபதி என்ற இளைஞர் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் போதையில் இருந்தாரா, பெண்ணிடம் அத்துமீற முயன்றதற்கான காரணம் என்ன, இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இளைஞர் ஒருவர் அத்துமீற முயன்ற வாலிபரை நாய்கள் துரத்தி கடித்து காப்பாற்றிய சம்பவம் கோவை துடியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com