

ஓமலூர் அடுத்த வேலகவுண்டன்புதூரை சேர்ந்த செங்கல் வியாபாரி பூபதி. இவர் செப்டம்பர் 1ம் தேதி ஓமலூர் – சங்ககிரி சாலையில் காரில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த காட்சி, அப்பகுதியையே உலுக்கியது. காரில் உடன் இருந்த அவரின் மனைவி சுஜிதாஸ்ரீ, காரை மறித்த 3 பேர் கொண்ட கும்பல் கணவரை கொன்று, அவரின் 12 பவுன் தங்க நகையை பறித்து சென்று விட்டதாக கதறி அழுதார். இந்த கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், கொலையாளிகளை பிடிக்க தீவிர புலன் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
ஆனால், பூபதியின் குடும்பத்தினர் தெரிவித்த சந்தேகத்தின் பேரில் களமிறங்கிய ஓமலூர் போலீசார் சுஜிதாஸ்ரீயின் கண்ணீருக்கு பின்னால் மறைந்திருந்த அந்த அதிர்ச்சி உண்மையை கண்டுபிடித்தனர். விசாரணையில் சொத்து பிரச்சனையில் அடிக்கடி ஏற்பட்ட குடும்பத் தகராறு, கணவரின் கொடுமை மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தன்று நள்ளிரவில் கள்ளக்காதலன் சந்தோஷ்ராஜ் மற்றும் தனது 13 வயது மகனுடன் சேர்ந்து, கணவன் பூபதியை வீட்டிலேயே கொடூரமாக வெட்டி கொன்றுள்ளார்.
பின்னர், உடலை காரில் ஏற்றி சென்று.. சாலையில் வழிப்பறி கும்பல் வழிமறித்து கொன்றதாகவும், 12 சவரன் திருடி சென்றதாகவும் சினிமா பாணியில் கதையளந்தது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து சுஜிதாஸ்ரீ, அவரது கள்ளக்காதலன் சந்தோஷ்ராஜ் மற்றும் 13 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சுஜிதாஸ்ரீ சேலம் மத்திய மகளிர் சிறையிலும், அவரின் கள்ளக்காதலன் சந்தோஷ்ராஜ் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். 13 வயது சிறுவன் சேலம் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். சேலத்தையே பரபரப்பில் ஆழ்த்திய இந்த கொடூர கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக்கு முன் தனது சுஜிதாஸ்ரீ சொன்ன கட்டு கதையாவது, அவரும் அவரது கணவரும் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஆட்டுக்காரனூர் அருகே காரை நிறுத்தியதாகவும்.. அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், காருக்குள்ளேயே பூபதியை கத்தியால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்வதாகவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, சுஜிதாஸ்ரீ-யின் கழுத்தில் இருந்த 9 சவரன் தங்க சங்கிலி மற்றும் பிரேஸ்லெட்டை பறித்து கொண்டு அக்கூட்டம் தப்பியோடியதாகவும் போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.