"5 மணி நேர விசாரணை" - மாணவிகள் இல்லாத அந்த 2 மணி நேரத்தில்... நடந்தது என்ன ? கோவையை உலுக்கிய கல்லூரி மாணவியின் தற்கொலை!

அனுப்பிரியாவை ஐந்தாவது மாடி கட்டிட அறையில் வைத்து முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் விசாரித்து உள்ளனர்.
college student Anupriya
college student Anupriya
Published on
Updated on
2 min read

கோவை, பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இங்கு மாணவ மாணவிகளுக்கான  தங்கும் விடுதியும் செயல்பட்டு வருகிறது. இந்த  கல்லூரியில் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த மாணவி அனுப்பிரியா (வயது 18) என்பவர் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ - மாணவிகளுக்கு அங்கு உள்ள மருத்துவமனை 4 - வது கட்டிடத்தில் பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டு இருந்தது. மதியம் அனைவரும் உணவு அருந்த சென்று விட்டனர். அப்போது மாணவ - மாணவிகள் அவர்கள் உடமைகளை பயிற்சி நடந்த வகுப்பறையில் வைத்து விட்டு சென்று உள்ளனர். 

இதில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவி வைத்து இருந்த பையில் இருந்த பர்சில் இருந்த பணம் 1500 ரூபாய் திடீரென மாயமானது. உணவு அருந்திவிட்டு வந்த மாணவி பணம் மாயமானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து பேராசிரியர்களிடம் கூறி உள்ளார். அப்போது அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது அனுபிரியா தனியாக அந்த அறையை விட்டு வெளியே வருவது தெரிய வந்தது. இதனால் அந்த மாணவி எடுத்து இருக்கலாம் என பேராசிரியர்கள் சந்தேகப்பட்டு உள்ளனர். 

உடனே இது குறித்து கல்லூரி முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அனுப்பிரியாவை ஐந்தாவது மாடி கட்டிட அறையில் வைத்து முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் விசாரித்து உள்ளனர். அப்பொழுது சக மாணவர்களும் உடன் இருந்து உள்ளனர். மாலை 2.00 மணி முதல் 4:30 மணி வரை விசாரணை நடந்து உள்ளது. ஆனால் அந்த மாணவி தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும்  பணம் எடுக்கவில்லை என்றும்  மறுத்து உள்ளார். மற்ற மாணவ - மாணவிகள் வகுப்புகள் முடிந்து விடுதிகளுக்கும், வீடுகளுக்கும் சென்ற நிலையில் அனுபிரியாவை மட்டும் அவர்கள் விடவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் மாலை ஆறு முப்பது மணி அளவில் அனுப்பிரியாவை அனுப்பி வைத்து உள்ளனர். ஆனால்  சோகத்துடன் வெளியேறிய அனுப்பிரியா நான்காவது தளத்திற்கு வந்தவுடன் திடீரென்று அங்கு இருந்து கீழே குதித்து உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். பணம் காணாமல் போன விவகாரத்தில் மாணவி 5 மணி நேரம் விசாரிக்கப்பட்ட நிலையில் நிலையில்  மாணவி தற்கொலை செய்து கொண்ட  தகவல் சக மாணவ - மாணவிகளுக்கு பரவியது. அவர்கள் சம்பவம் நடந்த இடத்தை முற்றுகையிட்டு உள்ளனர்.

பேராசிரியர்களை வெளியில் செல்ல விடாமல் தடுத்து உள்ளனர். கல் வீச்சு சம்பவமும்நடந்துள்ளதாக தெரிகிறது. . இதில் கல்லூரியின் கண்ணாடி உடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து  மாணவி அனுபிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கு இடையே அனுப்பிரியா தற்கொலை செய்த தகவல் திருவண்ணாமலையில் உள்ள மாணவி அனுப்பிரியாவின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. தந்தை இல்லாத நிலையில் ஒரே மகளான அனுப்பிரியா இறந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் வானதி உறவினர்களுடன் கோவைக்கு விரைந்து வந்தார். மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். இது குறித்து கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் வானதி புகார் செய்தார். இன்று மாணவி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 

மாணவியின்  உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் அறை முன்பு அவருடன் படித்தமற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள் திரண்டு நின்றனர். அவர்கள் மாணவி இறப்புக்கு நியாயம் கேட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கோவை அரசு மருத்துவமனை முன்பும்  கல்லூரி முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

தற்கொலைக்கான முழுமையான காரணம் இதுவரை சரியாக தெரியவில்லை. காவல் துறையினர் சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com