
சென்னை மாவட்டம், சூளைமேடு பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியும், டிஜிட்டல் மார்க்கெட்டிங் பணியாற்றும் 26 வயதுடைய பிரதாப் என்பவர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை இளைஞர்கள் மற்றும் விடுதிகளில் நடக்கும் பார்ட்டிகளுக்கு சப்ளை செய்வதாக போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போதைப்பொருள் நுண்ணறிவு போலீசாரும் சூளைமேடு போலீசாரும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பிரதாப்பை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரில் உள்ள பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மாதம் எண்பது ஆயிரம் ரூபாய் ஊதியத்தில்( work from home) பணியாற்றும் பள்ளிக்கரணையை சேர்ந்த 27 வயதுடைய ஜனார்த்தனன் என்பவரிடமிருந்து வாங்கியதாக தெரிவித்துள்ளார். எனவே அவரை பிடித்து விசாரித்த போது கீழ்கட்டளையில் தங்கி ஆலந்தூரில் உள்ள பிரபல கல்லூரியில் எம்பிஏ படிக்கும் 21 வயதுடைய பூரண சந்திரன் என்பவரிடம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பூரண சந்திரனை கைது செய்து அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் வேளச்சேரியை சேர்ந்த தனியார் கல்லூரியில் எம் பி ஏ படிக்கும் 22 வயதுடைய அப்துல் வசிம் என்பவர் இந்த போதை பொருள் விற்பனைக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. எம்பிஏ படித்து கொண்டு பிரபல உணவகத்தில் வசீம் பகுதி நேரமாக பணியாற்றி வருகிறார்.
குறுகிய காலத்தில் பெரிய பணக்காரராக வேண்டும் என்ற எண்ணத்தில் பெங்களூருவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் மூலம் இந்த தொழிலில் இறங்கியதாகவும், ஓ ஜி கஞ்சா, போதை மாத்திரைகள் போன்ற வற்றை வாங்கி தனது கல்லூரி நண்பர்கள், இன்டர்ன்ஷிப் சென்றபோது அறிமுகமான நண்பர்கள் தெரிந்த நபர்கள் மூலம் விற்பனை செய்வது தெரியவந்தது. இவர்கள் ஒரு கிராம் ஓஜி கஞ்சாவை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி 2500 ரூபாய் வரை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
கைதான நான்கு பேரிடமிருந்தும் மொத்தம் 260 கிராம் ஓஜி கஞ்சா, 1.5 கிலோ கஞ்சா, 8 MDMA போதை மாத்திரைகள், 2.65 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களில் பூரண சந்திரன் பாஜக மகளிர் அணி முன்னாள் நிர்வாகி சேலம் உமா ராணியின் மகனாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.