
திருவள்ளூர் மாவட்டம், அடுத்த கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதுடைய ராஜ்கமல் இவர் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்த ஸ்ரீவர்ஷினி என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தற்போது ராஜ்கமல் தன் மனைவியுடன் கடம்பத்தூர் அருகே உள்ள அகரம் சன் சிட்டி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடம்பத்தூர் சென்று விட்டு மீண்டும் தன் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயற்சி செய்தனர். இதனால் சுதாரித்த ராஜ்கமல் தனது வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஒட்டி சென்று அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். எனவே அந்த கும்பல் இரண்டு முறை நாட்டு வெடிகுண்டுகளை வீசிய போது தப்பித்து மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். இருப்பினும் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரை விடாமல் துரத்திச் சென்று மூன்றாவது இடத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.
இதிலும் அவர் திப்பித்த நிலையில் மர்ம நபர்கள் ஓடிச் சென்று அவரை மடக்கி கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி தலைமறைவாகி விட்டனர். இதனை தடுக்க வந்த மற்றொரு நபருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் போலீஸ் டி.எஸ்.பி தமிழரசி உத்தரவின் பேரில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வேகமாகச் சென்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்வதில் இரு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதாவது சீனுவாசன் என்பவர் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். அதே பகுதியில் ராஜ்கமல் கஞ்சா விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது . இதில் யார் பெரிய ஆள் என்பதில் இவர்கள் இரு குரூப் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செஞ்சிபானம்பாக்கம் பகுதியில் ஒருவரின் இறுதி சடங்கில் இரு தரப்பினரும் கலந்துகொண்ட நிலையில் ராஜ்கமல் மற்றும் மற்றொரு தரப்பினரான சீனிவாசன் குரூப்-பை சேர்ந்தவர்களுக்கும் இடையே கஞ்சா விற்பனை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜ்கமல் சீனிவாசனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ராஜ்கமலை தீர்த்துகட்ட நாட்டுவெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்தது தெரியவந்தது. இந்த நிலையில் கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராஜ்கமலை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திருவள்ளூர் -பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,விரைவில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.
இதனையடுத்து மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி கடம்பத்தூர் மேட்டு தெருவைச் சேர்ந்த சீனிவாசன், அஷ்டலக்ஷ்மி நகரைச் சேர்ந்த ஹரிபிரசாத், நாதன், என்.எஸ்.சி. போஸ் தெருவை சேர்ந்த யுவன்ராஜ், புதுமாவிலங்கை பகுதியைச் சேர்ந்த கார்த்திக், செஞ்சிபானம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நெல்சன் மற்றும் சிறுவன் உஸ்மான் உள்ளிட்ட 7 இளைஞர்களையும் போலீசார் கைது செய்து கொலை செய்ய காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் கடம்பத்தூர் மேல்பகுதி இளைஞர்களுக்கும் கீழ்பகுதி இளைஞர்களுக்கும் இடையே யார் கெத்து என்ற போட்டி இருந்ததாகவும், இதில் நாங்கள் தான் கெத்து என நிரூபிப்பதற்காக நாட்டு வெடிகுண்டு வீசியும் கத்தியால் வெட்டியும் இளைஞரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இளைஞர் நாட்டு வெடிகுண்டு வீசியும் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.