

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதுடைய முந்திரி விவசாயி ராஜேந்திரன். இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் மாளிகம்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிளை வழிமறித்து தாக்கினர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் தப்பித்து முந்திரி காட்டுக்குள் ஓடிய நிலையில், அவருடன் சென்ற விவசாயி ராஜேந்திரன் மீது மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி இருக்கின்றனர்.
இதனால் உடல் முழுவதும் தீ பரவி நிலையில் ராஜேந்திரன் உயிரை காப்பாற்றி கொள்வதற்காகவும் தீயின் சூடு தாங்க முடியாமலும் சாலையில் ஓடியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ராஜேந்திரன் உடலில் பற்றிய தீயை அணைத்து பலத்த காயமடைந்த அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ராஜேந்திரன் உடலில் தீ பரவிய நிலையில் ஓடிவந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் பண்ருட்டி டிஎஸ்பி ராஜா மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த காரின் உரிமையாளரான பண்ருட்டியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ராஜேந்திரனின் மகனான பூபதிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெய பிரியா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் மூன்று வருடங்களுக்கு முன்பு பூபதி உயிரிழந்திருக்கிறார். கணவன் உயிரிழந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்த ஜெய பிரியாவிற்கு ஏற்கனவே திருமணமான மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தனது மருமகள் ஜெய பிரியாவிற்கு மணிகண்டனுக்கும் திருமணத்திற்கு மீறிய தொடர்பு இருப்பதை அறிந்த விவசாயி ராஜேந்திரன் இது குறித்து கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெய பிரியா மற்றும் மணிகண்டன் திட்டம் தீட்டி இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜேந்திரனை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரியவந்துள்ளது. ஐகானை தொடர்ந்து மணிகண்டன் ஜெய பிரியா மற்றும் மணிகண்டனை நண்பர்களை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். முந்திரி விவசாயி சொந்த மருமகளால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.