

கடலூர் மாவட்டம், பாதிரிகுப்பம் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் 37 வயதுடைய பிரசாந்த். இவர் ஐடிஐ படித்துவிட்டு அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் திருமணமாகாமல் தாயுடன் வசித்து வந்திருக்கிறார். இவரின் பக்கத்துக்கு வீட்டில் 21 வயதுடைய பட்டதாரி பெண் அவரது அக்கா மற்றும் அக்கா கணவருடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணிடம் அடிக்கடி பிரசாந்த் பேசி வந்திருக்கிறார். பலமுறை அவரது வீட்டில் கண்டித்தும் தொடர்ந்து பிரசாந்த் அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம் பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த பிரசாந்த் யாருக்கும் தெரியாமல் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். மேலும் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். எனவே இளம் பெண் தனக்கு நடந்த கொடுமை பற்றி யாரிடமும் சொல்லாமல் மௌனம் காத்து வந்திருக்கிறார். இதன் காரணமாக இளம்பெண் வேலைக்கு கூட செல்லாமல் மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் பிரசாந்த் அதே போல இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் பிரசாந்த் குறித்து தாது அக்கா மற்றும் அக்கா கணவரிடம் தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து இளம்பெண்ணின் அக்கா கவிப்பிரியா மற்றும் அவரது மாமா முத்துக்குமரன் ஆகிய இருவரும் சேர்ந்து பிரசாந்திடம் இது குறித்து கேட்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது தான் எதுவும் செய்யவில்லை என கூறிய பிரசாந்த் கவிப்ரியா மற்றும் அவரது கணவர் முத்துவை தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப் படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவன் மனைவி இருவரும் சேர்ந்து நடுரோட்டில் வைத்து கத்தியால் பிரசாந்தின் கழுத்தை அறுத்து உள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து வீட்டிற்குள் சென்ற பிரசாந்த் அதிக ரத்தம் வெளியேறி வீட்டிற்குள் உயிரிழந்திருக்கிறார். இதனை தொடர்ந்து கவிப்பிரியா மற்றும் அவரது கணவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த பிரசாந்தின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து கவிப்பிரியா, முத்துக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைந்திருக்கின்றனர். தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை பெண்ணின் அக்கா கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.