“பட்டப்பகலில் நடந்த கத்திக்குத்து” - பேச மறுத்த இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்.. வெறிச்செயலில் ஈடுபட்ட காதலன்!

பலமுறை சந்தோஷ் திவ்யாவை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது..
Cuddalore Panruti Stabbing Case
Cuddalore Panruti Stabbing Case
Published on
Updated on
2 min read

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, மருந்தகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இளம்பெண்ணை அவரது அத்தை மகன் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு இளைஞரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதுடைய திவ்யா. அதே பகுதியைச் சேர்ந்த அவரது அத்தை மகன் 25 வயதுடைய சந்தோஷ். இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபகாலமாக திவ்யா சந்தோஷிடம் பேசுவதை நிறுத்தியதாக தெரிகிறது. பலமுறை சந்தோஷ் திவ்யாவை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் திவ்யா பண்ருட்டி காமராஜர் நகரில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே உள்ள முதலமைச்சர் மருந்தகத்தில் பணியாற்றி வந்துள்ளார். மேலும் பொறியியல் பட்டதாரியான சந்தோஷ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று( செப் 18) பகல் திவ்யா மருந்தகத்தில் பணியில் இருந்தபோது அங்கு சென்ற சந்தோஷ், தன்னுடன் ஏன் பேசவில்லை எனக் கேட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. திவ்யா சரியான பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் திவ்யாவின் கழுத்து உள்ளிட்ட உடலின் 6 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Young Woman Stabbed in Panruti
Young Woman Stabbed in Panruti

கத்திக்குத்தில் படுகாயமடைந்த திவ்யா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சந்தோஷை மடக்கிப் பிடித்தனர். பின்னர் இதுகுறித்து பண்ருட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், படுகாயமடைந்த திவ்யாவை மீட்ட பொதுமக்கள், அவரை உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பண்ருட்டி போலீசார், பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த சந்தோஷை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மருந்தகத்திற்குள் புகுந்த காதலன் இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com