தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும் அக்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் புகார் அளித்துள்ளார். மேலும், தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், தனது விருப்பத்திற்கு எதிராக கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாகவும், தன்னையும் தனது குழந்தையையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். பாஜக பெண் நிர்வாகி ஒருவர், கட்சியின் தேசிய மற்றும் மாநில தலைமையிடம் கருப்பு முருகானந்தம் மீது புகார் அளித்துள்ளார்.
அதில், ஏற்கனவே திருமணமான தன்னை கருப்பு முருகானந்தம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நம்ப வைத்து ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடன் நெருக்கமாக பழகிய அவர் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும், கட்டாயப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பு பெற்றுத் தருவதாக கருப்பு முருகானந்தம் உறுதியளித்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். அவரது வாக்குறுதியை நம்பி, கர்நாடகாவில் பாஜகவில் வகித்து வந்த மாநில அளவிலான பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு, கடந்த 2024ஆம் ஆண்டு திருச்சிக்கு வந்ததாகவும் புகாரில் கூறியுள்ளார்.
தொடர்ந்து கருப்பு முருகானந்தத்துடனான உறவின் காரணமாக தான் கர்ப்பமானதாகவும், தனது விருப்பத்திற்கு எதிராக கருக்கலைப்பு செய்ய அவர் கட்டாயப்படுத்தியதாகவும் பெண் நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இது குறித்து மருத்துவ ஆவணங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என அவர் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். தனக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கேட்டபோது, தன்னையும் தனது குழந்தையையும் கொலை செய்து விடுவதாக கருப்பு முருகானந்தம் மிரட்டியதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது சொந்த வீட்டை விட்டு தன்னை வெளியேற்றுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். கருப்பு முருகானந்தம் மீது BNS சட்டத்தின் பிரிவு 75 உள்ளிட்ட 9 சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, காவல்துறையிடமும் இணைய வழியாக பெண் நிர்வாகி புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டிய நிலையில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் புகாரளித்த பெண் தரப்பில் முன்வைக்கப்பட்டவையாகும்.
இதனிடையே, தன் மீது அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து கட்சித் தலைமையோ அல்லது காவல்துறையோ இதுவரை தன்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை என கருப்பு முருகானந்தம் தெரிவித்திருந்தார். புகாரின் முழு விவரங்களை அறிந்த பிறகு அதுகுறித்து விளக்கம் அளிப்பதாகவும் அவர் கூறி இருந்தார். பின்னர் வெளியான தகவலின்படி, பெண் நிர்வாகி அளித்த புகாரைத் தொடர்ந்து கருப்பு முருகானந்தம் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து உரிய விசாரணை மற்றும் சட்ட நடைமுறைகளின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்