

மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில், தலைமைக் காவலர் தனது சொந்த மகளால் மில்க்ஷேக்கில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், கிட்டத்தட்ட மூன்று வருடத்திற்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தலைமைக் காவலரான ஜெயந்த் பல்லாவர் மார்ச் 25, 2023 அன்று, சந்திராபூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பணியில் இருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது ஒரு இயற்கை மரணமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மூன்று வருடத்திற்கு பிறகு, அது கொலை என வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2023ம் ஆண்டு, ஏப்ரல் 25 அன்று காலை, மகாராஷ்டிர காவல்துறை அதிகாரியான 45 வயது ஜெயந்த் பல்லாவர், வழக்கம் போல் பணிக்குச் செல்ல வீட்டிலிருந்து புறப்படத் தயாரானார். அப்போது அவரது மகள் ஆர்யா, அவரிடம் ஒரு மில்க்ஷேக்கைக் கொடுத்தார். அவர் அதைக் குடித்துவிட்டு பணிக்கு சென்றிருக்கிறார். அதன்பின்பு, சந்திராபூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நிர்வாகக் கட்டிடத்தை அவர் சென்றடைந்தபோது, அவருக்குத் தலைசுற்றல் ஏற்பட்டது. அவர் சரிந்து விழுந்து உயிரிழந்தார். அப்போது, மரணத்திற்கான காரணம் திடீர் உடல்நலக்குறைவு மட்டுமே காரணம் என்று பதிவு செய்யப்பட்டது. எந்தக் குற்றச் செயலும் சந்தேகிக்கப்படாமல் கோப்பு மூடப்பட்டது. தற்போது இது கொலைதான் என்று தெரியவந்துள்ளது.
ஆர்யா பல்லாவர் 2022 முதல் ஆஷிஷ் ஷெட்மேக்குடன் உறவில் இருந்து வந்திருக்கிறார். ஆனால், ஜெயந்த் பல்லாவர் இந்த உறவை எதிர்த்திருக்கிறார். காவல்துறையின் கூற்றுப்படி, தங்களது தடையாக இருக்கிறார் என்று கூறி, அந்த ஜோடி அவரை கொலைசெய்ய முடிவு செய்தது. ஆர்யா தனது உறவினரான 22 வயது சைதன்யா கெடமைத் தொடர்புகொண்டு, விஷத்தைப் பெறுவதற்காக அவருக்கு 5,000 ரூபாய் கொடுத்துள்ளார். அடையாளம் இன்னும் வெளியிடப்படாத நான்காவது நபர் ஒருவர், அந்தப் பொருளைத் தானே வழங்கியுள்ளார். குறிப்பிட்ட அந்த காலையில், ஆர்யா விஷத்தை மில்க்ஷேக்கில் கலந்து, பணிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த தன் தந்தைக்குக் கொடுத்துள்ளார். அவர் அதை அருந்திவிட்டுப் பணிக்கு சென்றுள்ளார். அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த பின்னரே அறிகுறிகள் தோன்றியிருக்கின்றன. அவரது மரணம் இயற்கையானது போல் தோன்றியதால், அப்போது பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடப்படவில்லை.
அந்த நேரத்தில் ஆர்யாவோ, ஆஷிஷோ காவல்துறையில் பணியில் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஷிஷ் இந்த நிகழ்விற்கு பின்னரே காவல்துறை படையில் சேர்ந்திருக்கிறார். ஆனால் ஒழுங்கீனமான நடத்தை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆர்யா தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு கருணை அடிப்படையில் காவல்துறையில் ஒரு பதவியைப் பெற்றார். தற்போது பயிற்சி பெற்று வருகிறார். ஆர்யாவுக்கும் ஆஷிஷுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்குப் பிறகு இருவரும் பிரிந்துள்ளனர். அதன் பின்பு, ஆஷிஷ் காவல்துறையை அணுகி இந்த சதித்திட்டத்தை வெளிப்படுத்திய பின்னரே இந்தக் குற்றம் வெளிச்சத்திற்கு வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் அடிப்படையில், காவல்துறை இந்த வழக்கை மீண்டும் திறந்து, பிரேத பரிசோதனை அறிக்கையை மறுபரிசீலனை செய்தது. அந்த அறிக்கையில், விஷம் கொடுக்கப்பட்டதை உறுதி செய்தது. விசாரணையின் போது, ஆர்யா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.