“8 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் அத்துமீறல்” - கிருஷ்ணகிரி முதல் பெங்களூரு வரை தேடுதல் வேட்டை.. 17 வயது சிறுவன் கைது!

சிறுமியை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர், ஆளில்லாத இடம் வரும் வரை காத்திருந்து அவரிடம் பாலியல் அத்துமீறலில்...
pocso case
pocso case
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மலைக் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த (ஆக - 12) ஆம் தேதி பள்ளி முடிந்ததும், சக மாணவிகளுடன் சிறுமி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். வழியில் மாணவிகள் ஒவ்வொருவராக தங்களது வீடுகளுக்கு சென்ற நிலையில், சிறுமியின் வீடு கடைசியாக இருந்ததால் அவர் மட்டும் தனியாக வீட்டிற்கு நடந்து சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, சிறுமியை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர், ஆளில்லாத இடம் வரும் வரை காத்திருந்து அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்து வீட்டிற்கு சென்ற சிறுமி, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமி அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளி உடனடியாக சிக்காத நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா உத்தரவின்பேரில், தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீசார் அடங்கிய தனிப்படையினர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

இதில், அதே மலைக் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட சிறுவன் 8ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, தற்போது கிராமத்தில் மாடு மேய்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கிருஷ்ணகிரி சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின்பேரில், சிறுவன் சேலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். 8 வயது பள்ளி சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டதால் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டிருப்பது தேன்கனிக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com