“பிளாஸ்டிக் கவரில் எடுத்துவரப்பட்டு மனித கை” - தோட்டத்தில் நடந்த அரிவாள் வெட்டு.. அலறிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்த தொழிலாளி!

தேங்காய் வெட்டும் அரிவாளால் முனியாண்டியின் கையை வெட்டியதாக கூறப்படுகிறது...
Dharapuram Coconut Cutting Dispute
Dharapuram Coconut Cutting Dispute
Published on
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே தேங்காய் வெட்டும் வேலை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தொழிலாளி ஒருவரின் கையை மற்றொரு தொழிலாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் அருகே உள்ள கவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரனுக்கு சொந்தமான தோட்டத்தில், பெருந்துறை அருகே உள்ள வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் பல ஆண்டுகளாக தேங்காய் வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் புதிதாக ஈஸ்வரனின் தோட்டத்திற்கு தேங்காய் வெட்டும் பணிக்காக வந்துள்ளார். இதனால், யார் அதிக வேலை செய்வது மற்றும் யார் நம்பிக்கை உரியவர்கள் என்பது தொடர்பாக ரஞ்சித்துக்கும் முனியாண்டிக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று வழக்கம் போல முனியாண்டி மீண்டும் ஈஸ்வரன் தோட்டத்திற்கு தேங்காய் வெட்டும் பணிக்காக வந்துள்ளார். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ரஞ்சித், தேங்காய் வெட்டும் அரிவாளால் முனியாண்டியின் கையை வெட்டியதாக கூறப்படுகிறது.இதில் படுகாயமடைந்த முனியாண்டி வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார்.

பின்னர், துண்டான கையை பிளாஸ்டிக் கவரில் வைத்துக் கொண்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். தாராபுரம் அரசு மருத்துவமனையில் தேவையான சிகிச்சை வசதிகள் இல்லாததால், துண்டான கையை ஐஸ் பேக்கில் பாதுகாப்பாக வைத்து, முனியாண்டியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேங்காய் வெட்டும் வேலை தொடர்பாக இரு தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் மற்றொருவரின் கையை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com