பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஹர்சரண் சிங் புல்லர், லஞ்சம் கோரிய விவகாரத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழைய வழக்கு ஒன்றை முடித்து வைப்பதற்காக ரோப்பர் சரக டிஐஜி ஹர்சரண்
சிங் புல்லர், இடைத்தரகர் மூலம் ரூ. 8 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை ஃபதேஹ்கர் சாஹிப் மாவட்டத்தைச் சேர்ந்த இரும்பு வியாபாரி ஆகாஷ்
பட்டா என்பவர் சிபிஐ-யில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, தனது அலுவலகத்துக்கு முதல் தவணை பணத்தை பெறுவதற்காக ஆகாஷை ஹர்சரண் அழைத்துள்ளார். சரியாக திட்டமிட்ட சிபிஐ காவல்துறையினர் ஹர்சரண் சிங் புல்லரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
கைது நடவடிக்கையை தொடர்ந்து, ஹர்சரண் சிங் புல்லர் அலுவலகம், வீடுகளில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவரையும் இடைத்தரகர் ஒருவரையும் கைது செய்தனர்.
டிஐஜி ஹர்சரண் சிங் புல்லர் கைது நடவடிக்கைக்காக பஞ்சாப் மாநில சிபிஐ அதிகாரிகளை தவிர்த்து, வெளிமாநில அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஹர்சரண் சிங்கின் அலுவலகம், வீடு, பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை காலை முதல் சிபிஐ குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் முடிவில், ரூ.5 கோடி ரொக்கம், 1.5 கிலோ நகைகள், 22 விலை உயர்ந்த கடிகாரங்கள், ஆடி, மெர்சிடிஸ் உள்ளிட்ட சொகுசுக் கார்கள், லாக்கர் சாவிகள், இறக்குமதி செய்யப்பட்ட 40 லிட்டர் மதுபான பாட்டில்கள், கைத் துப்பாக்கி, ரிவால்வர் உள்ளிட்டவை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், அசையா சொத்துகள் தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனிடையே, இடைத்தரகரிடம் இருந்தும் ரூ. 21 லட்சம் பணத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 2009 -ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ஹர்சரண் சிங் புல்லர், முன்னாள் பஞ்சாப் டிஜிபி மேஹல் சிங் புல்லரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மொஹாலி காவல்துறை கண்காணிப்பாளராகவும், பட்டியாலா சரக காவல்துறை துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.