10 மணி நேரம் வீடியோ Call-ல் சிறை! குடும்பத்தையே குறிவைக்கும் டிஜிட்டல் கைது மோசடி!

அழைப்பைத் துண்டிக்கக் கூடாது என்றும், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் மிரட்டுவார்கள்...
Digital arrest scam in India
Digital arrest scam in India
Published on: 
Updated on: 
2 min read

காவல்துறை அதிகாரி போல உடை அணிந்த ஒருவர் வீடியோ அழைப்பில் தோன்றி, உங்கள் பெயர் ஒரு பெரிய குற்ற வழக்கில் இடம்பெற்றுள்ளதாகக் கூறினால் என்ன செய்வீர்கள்? அதுவும் உங்களைக் கைது செய்யப்போவதாகவும், குடும்பத்தினரையும் விசாரிக்கப்போவதாகவும் மிரட்டினால் பதற்றமடைவது இயல்புதான். ஆனால், இதுபோன்ற மிரட்டல்களைப் பயன்படுத்தி மக்களிடம் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் பணம் பறிக்கும் சைபர் மோசடி தற்போது அதிகரித்து வருகிறது. இதற்குப் பெயர்தான் 'டிஜிட்டல் கைது' (Digital Arrest) மோசடி.

மோசடியில் ஈடுபடுபவர்கள் காவல்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை, சுங்கத்துறை அல்லது தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் போலத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். முதலில் ஒரு தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி வரும். உங்கள் பெயரில் அனுப்பப்பட்ட பார்சலில் போதைப்பொருட்கள் அல்லது போலி ஆவணங்கள் இருப்பதாகவும், உங்கள் ஆதார் அட்டை அல்லது வங்கிக் கணக்கு சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுவார்கள். இதனால் நீங்கள் ஒரு குற்ற வழக்கில் சிக்கியுள்ளதாக நம்ப வைப்பார்கள்.

அடுத்தகட்டமாக, வாட்ஸ்அப் அல்லது ஸ்கைப் போன்ற செயலிகள் மூலம் வீடியோ அழைப்பை மேற்கொள்வார்கள். காவல்துறை சீருடை, போலியான அடையாள அட்டை, பின்னணியில் காவல் நிலையம் போன்ற அமைப்பு ஆகியவற்றைக் காட்டி உண்மையான அதிகாரிகள் போல நடிப்பார்கள். சில நேரங்களில் போலியான கைது உத்தரவுகளையும் காண்பிப்பார்கள். விசாரணை முடியும் வரை அழைப்பைத் துண்டிக்கக் கூடாது என்றும், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் மிரட்டுவார்கள். குடும்பத்தினரிடம் கூட இதுபற்றிப் பேசக்கூடாது என்று கட்டுப்படுத்துவார்கள்.

உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. ஒரு தம்பதியிடம் சுமார் 10 மணி நேரம் வீடியோ அழைப்பில் பேசிய மோசடியாளர்கள், அவர்களுக்கு பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினர். போலியான கைது உத்தரவையும் காட்டினர். தம்பதியினர் அச்சத்தில் இருந்தபோது, அவர்களுடைய எட்டாம் வகுப்பு படிக்கும் மகன் சந்தேகமடைந்து தொலைபேசியின் இணைய இணைப்பைத் துண்டித்தான். இதனால் மோசடி முயற்சி தடுக்கப்பட்டு, குடும்பத்தினர் பணத்தை இழப்பது தவிர்க்கப்பட்டது.

திருச்சியிலும் டிஜிட்டல் கைது மோசடிகள் குறித்து காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு, தனியார் ஊழியர்களை மோசடியாளர்கள் குறிவைப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

மிக முக்கியமாக, இந்தியச் சட்டத்தில் 'டிஜிட்டல் கைது' என்ற நடைமுறையே கிடையாது. எந்தவொரு காவல்துறை அமைப்பும் வீடியோ அழைப்பின் மூலம் ஒருவரைக் கைது செய்ய முடியாது. வழக்கை முடிக்கவோ, கைது நடவடிக்கையைத் தவிர்க்கவோ பணம் செலுத்த வேண்டும் என்றும் உண்மையான அதிகாரிகள் கேட்க மாட்டார்கள். இதுவே உண்மையான விசாரணைக்கும் போலி மிரட்டலுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு.

இதுபோன்ற அழைப்புகள் வந்தால் முதலில் பதற்றமடையாமல் உடனடியாக அழைப்பைத் துண்டிக்க வேண்டும். பணம் அனுப்பவோ, வங்கிக் கணக்கு விவரங்கள், ஓடிபி, ஆதார் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைப் பகிரவோ கூடாது. அழைப்பில் காட்டப்படும் அதிகாரிகளின் விவரங்களை நம்பாமல், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு சரிபார்க்க வேண்டும். பணத்தை ஏற்கெனவே இழந்திருந்தால் உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணை அழைக்க வேண்டும். மேலும், cybercrime.gov.in இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு வரும் சந்தேகத்திற்குரிய அழைப்புகளை மறைக்காமல் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். பயத்தை ஏற்படுத்தி நம்முடைய சிந்திக்கும் திறனை முடக்குவதுதான் இந்த மோசடியாளர்களின் முக்கிய உத்தி. எனவே, பயப்படாமல் உண்மையைச் சரிபார்ப்பதும், குடும்பத்தினருடன் தகவல்களைப் பகிர்வதும் மட்டுமே இத்தகைய டிஜிட்டல் மோசடிகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.