

திருச்சி மணப்பாறை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி கடன் தொல்லை தாங்க முடியாமல் தங்களது மூன்று மகள்கள் படிப்பையும் நிறுத்திவிட்டு அவர்களை அழைத்து கொண்டு ஊரை விட்டு கொடைக்கானலுக்கு சென்று வடகவுஞ்சி அடுத்துள்ள உள்ள செம்பிரான்குளம் பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் அப்பகுதியில் இருந்த தனியார் டீ எஸ்டேட்டில் தங்களது மூன்று மகள்களுடன் குடும்பமாக கூலி வேலைக்கு சேர்ந்து வேலை செய்து வந்தனர்.
அப்போது அதே எஸ்டேட் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த 45 வயதான தோப்படியான் திருச்சி தம்பதியருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தம்பதியின் மூத்த மகளான 17 வயதுடைய பிரியதர்ஷினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. பெற்றோர் எங்கு தேடியும் அவர் கிடைக்காத நிலையில் இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
தகவல் அறிந்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு சிறுமி குறித்து எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் தனிப்படை அமைத்து சிறுமியை தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை சிலர் செம்பிரான்குளம் பகுதியில் பார்த்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. சிறுமியின் வீட்டிற்கு எதிரில் வசித்து வந்த 45 வயதுடைய தோப்படியான் சிறுமியிடம் நன்றாக பேசி ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு தெரியாமல் அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
பின்னர் தனியாக வீடு எடுத்து கடந்த இரண்டு மாதங்களாக சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து சிறுமியை அவரிடமிருந்து மீட்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தோப்படியான் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி 45 வயதுடைய நபர் திருமணம் செய்து இரண்டு மாதங்களாக குடும்பம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.