

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 20 வயதுடைய ரஞ்சன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முஸ்கான். என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் சாராவுக்கு 3 வயது ஆகும் நிலையில் ரஞ்சன் குடும்பத்துடன் நாகர்கோவில் கோட்டாரில் தேவாலய திருவிழாவில் அங்கயே தங்கி பலூன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று தனது சொந்த ஊருக்கு செல்ல மனைவி மற்றும் குழந்தைகளுடன் ரஞ்சன் ரயில் நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.
அப்போது தனது குழந்தைகளுடன் ரயில் நிலையத்திற்கு வெளியே அமர்ந்திருந்த ரஞ்சனிடம் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இவர்களுக்கு உணவு வாங்கி கொடுப்பதாகவும், பயணச்சீட்டு வாங்க உதவி செய்வதாகவும் கூறி 3 வயது பெண் குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். பின்னர் இவர்கள் நீண்ட நேரம் தேடியும் அந்த நபர் திரும்பி வராத நிலையில் அச்சமடைந்த வடமாநில தம்பதி இது குறித்து ரயில்வே போலீசாருக்கும் கோட்டார் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்து புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு சாலைகளில் வாகனங்களையும் சோதனையிட்டனர். மேலும் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து குழந்தையை கடத்தி சென்ற அவர் அடையாளம் காணப்பட்டு தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் இடம் விசாரணை மேற்கொண்ட போலீசார். குழந்தையை கடத்தி சென்ற யோகேஷ் குமார் என்ற நபரை கைது செய்து அவரிடமிருந்த குழந்தையை நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் பகுதியில் இருந்து பத்திரமாக மீட்டனர். குழந்தை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிறுமி எந்தவித பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் எதற்காக? குழந்தை கடத்தப்பட்டது என யோகேஷ் குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.