“கணவன் எதிரிலேயே புதுமணப் பெண்ணுக்கு ஆபாச தொல்லை” - பேருந்து பயணத்தில் விபரீதம்.. கிளாம்பாக்கத்தில் போதை வாலிபர் அத்துமீறல்!

தன்னை ஆபாசமாகப் பேசி அவமதித்ததோடு, தன்னை பாதுகாக்க முயன்ற தனது கணவரையும் தாக்கிய பாலா மீது...
accust bala
accust bala
Published on
Updated on
1 min read

சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த புதுமண தம்பதியினர், உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று மாநகர பேருந்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நோக்கி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து அவர்கள் அச்சரப்பாக்கம் செல்ல திட்டமிட்டிருந்தனர். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த 23 வயதுடைய பாலா என்பவர், அதீத மதுபோதையில் இருந்த நிலையில் பேருந்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே அவர் புதுமணப் பெண்ணை நோக்கி தொடர்ந்து ஆபாசமாகப் பேசுவதும், கிண்டல் செய்வதும், அநாகரிகமாக நடந்து கொள்வதுமாக இருந்ததாக கூறப்படுகிறது.

உறவினர்கள் வீட்டிற்கு செல்லும் வழியில் பிரச்சனை வேண்டாம் என இருவரும் பொறுமையாக இருந்திருக்கின்றனர். தொடர்ந்து பொதுமக்கள் முன்னிலையிலேயே அந்த வாலிபர் அநாகரீகமான பாலியல் செயல்களில் ஈடுபட்ட சம்பவம் தம்பதியினருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. பேருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வந்தடைந்ததும் புதுமணத் தம்பதியினர் கீழே இறங்கியுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னரே பேருந்தை விட்டு இறங்கிய வாலிபர் விடாமல் தொடர்ந்து அந்த பெண்ணை ஆபாச வார்த்தைகளால் பேசியதாக சொல்லபடுகிறது.

இதனால் பொறுமையை இழந்து ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் ஹரி பிரகாஷ், பாலாவை தட்டிக்கேட்டு அவரது செயலை கண்டித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியதாக தெரிகிறது. இதையடுத்து, தன்னை ஆபாசமாகப் பேசி அவமதித்ததோடு, தன்னை பாதுகாக்க முயன்ற தனது கணவரையும் தாக்கிய பாலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுமணப் பெண் கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது போக்குவரத்தில் பயணம் செய்த புதுமணப் பெண்ணுக்கு, அவரது கணவர் அருகில் இருந்த நிலையிலும் மதுபோதையில் இருந்த வாலிபர் ஆபாசத் தொல்லை கொடுத்த சம்பவம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com