முதியவரிடம் பணத்தை ஏமாற்றிய 'தவெக' பெண் நிர்வாகி! "பெண் நிர்வாகிக்கு ஆதரவாக நின்ற காவலர்கள்" - பணத்தை திருப்பி தராததால் மனமுடைந்து தற்கொலை

விஸ்வநாதன் வீட்டிற்கு வந்த கலைவாணி, அவரது ஏடிஎம் கார்டையும் திருடிச் சென்றுள்ளார். மேலும், அதிலிருந்து ரகசியமாக மேலும் ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துள்ளார்.
Elderly man suicide
Elderly man suicideElderly man suicide
Published on
Updated on
2 min read

சென்னை டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (73), இவருடைய மனைவி தங்கமணி. இவர்களது இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் தற்போது வேலைவாய்ப்பின்றி தவித்து வந்துள்ளனர். இதனால், விஸ்வநாதன் டி.பி. சத்திரத்தில் இருந்த தனது சொந்த வீட்டை விற்பனை செய்துவிட்டு, மனைவியின் அண்ணன் வீட்டின் அருகே குடியேறியுள்ளார்.

இதை அறிந்த விஸ்வநாதனின் மனைவியின் அண்ணன் மகளும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளருமான கலைவாணி, விஸ்வநாதனிடம் "தவெக மாவட்ட செயலாளர், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் தென்னரசு தனக்கு மிகவும் நெருக்கமானவர். எனவே உங்களுக்கு அவரிடம் சொல்லி,காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே சாலமங்கலத்தில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அரசு கட்டியுள்ள அடுக்கு மாடி வீடு வாங்கித் தருகிறேன்" என்று ஆசை வார்த்தை கூறி, விஸ்வநாதனிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.7 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார்.

ஆனால், சொன்னபடி வீடு வாங்கித் தராமல் வெகு நாட்களாக இழுத்தடித்துள்ளார். இதனால் வேறு வழியின்றி விஸ்வநாதன் தம்பதியினர் அதே ஹவுசிங் போர்டு பகுதியில் ஒரு வாடகை வீடு எடுத்து அங்கு குடியேறியுள்ளனர். இந்தச் சூழலில், விஸ்வநாதன் வீட்டிற்கு வந்த கலைவாணி, அவரது ஏடிஎம் கார்டையும் திருடிச் சென்றுள்ளார். மேலும், அதிலிருந்து ரகசியமாக மேலும் ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துள்ளார்.

அதுமட்டுமன்றி, விஸ்வநாதன் காஞ்சிபுரத்தில் வாங்கி வைத்திருந்த இடத்தின் அசல் ஆவணங்களையும் ஏமாற்றி வாங்கி வைத்துக்கொண்டு, அதை அவரிடம் திருப்பித் தரவும் மறுத்து வந்துள்ளார். பணத்தையும் இழந்து, நிலத்தின் ஆவணங்களையும் பறிகொடுத்து நிர்கதியாய் நின்ற விஸ்வநாதன், பொறுமை இழந்து படப்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், தவெக மாவட்ட செயலாளர், அமைச்சர் தென்னரசு பெயரைக் கூறிக்கொண்டு அரசியல் பலத்தோடு காவல் நிலையம் வந்த தவெக நிர்வாகி கலைவாணி, "நான் 7 லட்சம் ரூபாய் வாங்கவே இல்லை, அதற்கு என்ன சாட்சி இருக்கிறது?" என்று கூறி பணத்தைத் தர முடியாது என கறாராக மறுத்துள்ளார். காவல்துறையினரும் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று தவெக பெண் நிர்வாகிக்கு ஆதரவாக பேசியதாகக் கூறப்படுகிறது.

காவல்நிலையம் சென்றும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லையே என்ற வேதனையுடனும், மன உளைச்சலுடனும் விஸ்வநாதன் வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த விஸ்வநாதன், மிகுந்த மனவேதனையுடன் தனது மனைவி மற்றும் மகன்களிடம், "நான் எப்படியாவது அந்தப் பணத்தை உங்களுக்கு மீட்டுத் தருகிறேன்" என்று கூறிவிட்டு, திடீரென எலி மருந்தை குடித்துள்ளார். அவர் மயங்கி விழுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சுமார் 45 நிமிடங்கள் உயிருடன் போராடிய முதியவர் விஸ்வநாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

முதியவர் உயிரிழந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, படப்பை காவல்துறையினர் தவெக நிர்வாகி கலைவாணியிடம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, விஸ்வநாதனின் இறுதிச்சடங்கு செலவிற்காக கலைவாணியிடமிருந்து வெறும் 1 லட்சம் ரூபாயை மட்டும் போலீசாரே வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது விஸ்வநாதனின் குடும்பத்தினர் சொந்த வீடும் இல்லாமல், கையில் பணமும் இல்லாமல், தவெக பெண் நிர்வாகியின் அடுத்தடுத்த சூழ்ச்சிகளால் நடுத்தெருவிற்கு வந்துள்ளனர். தவெக அமைச்சர் தென்னரசு பெயரைப் பயன்படுத்தி ஏமாற்றிய தவெக பெண் நிர்வாகிக்கு ஆளுங்கட்சியினருக்குச் சாதகமாக படப்பை காவல்துறையினரும் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த புகாரை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி புகாரின் மீது தற்போது வரை வழக்கு பதிவு செய்யவில்லை, என்றும் பணம் ஏழு லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்து விடுகிறோம், பணம் கொடுக்கவில்லை என்றால் தான் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்போம் என்று அலட்சியமாக கூறியுள்ளனர். மேலும், அமைச்சர் தென்னரசுவின் பெயரைக் கூறி ஏழை முதியவரின் தற்கொலைக்குக் காரணமான தவெக மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் கலைவாணி மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட படப்பை காவல்துறையினர் மீது அரசு உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com