மூதாட்டி கொலை.. நாடகமாடிய கள்ளக்காதல் ஜோடி! 1 பவுன் நகைக்காக இப்படியா? ஊரையே நடுங்கவைத்த கொடூர சம்பவம்!

பிரேத பரிசோதனையில் மூதாட்டி மூச்சு திணறல் காரணமாகவே உயிரிழந்து இருப்பது தெரியவந்தது
kirishnagiri old lady murder
Published on: 
Updated on: 
2 min read

கிருஷ்ணகிரி அருகே 1 பவுன்  நகைக்காக மூதாட்டியை கொலை செய்ததாக கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். 

 கிருஷ்ணகிரி மாவட்டம், கூலியம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்அம்மனேரி கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள். 80 வயதான இவர் கணவனால் கைவிடப்பட்டு தனியாக வசித்து வருகிறார். அதே கிராமத்தில் தனது சகோதரர்களின் வீட்டுக்கு அருகே குடிசை அமைத்து கடந்த 40 ஆண்டுகளாக தனியே வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம், தனது குடிசையில் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இறப்பில் சந்தேகம் இருப்பதாக கருதிய அவரது உறவினர்கள் கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மூதாட்டி அணிந்திருந்த ஒரு பவுன் தங்கத்தோடு மற்றும் கால் கொலுசு காணாமல் போய் இருந்தது தெரியவந்துள்ளது. எனவே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனையில் மூதாட்டி மூச்சு திணறல் காரணமாகவே உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. எனவே போலீசார் சந்தேகத்தின் பேரில் மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த நாகம்மாள் (40) என்ற பெண்ணை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவருக்கும், செம்படமுத்துரை சேர்ந்த குண்டா பெருமாள் (43) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் சேர்ந்து மூதாட்டியை, பெட்சீட்டால் முகத்தை அழுத்தி கொலை செய்து விட்டு, நகைகளை திருடி சென்று இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி கள்ளக்காதல் ஜோடியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 1 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.